சிக்கிம் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றால் அம்மா உணவம் அமைக்கப்படும் என அக்கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. ‘மோடியின் உத்தரவாதம் - வளர்ச்சியடைந்த பாரதம்; வளர்ச்சியடைந்த சிக்கிம்’ என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
அதில், சிக்கிம் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றால் அம்மா உணவம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. “வடகிழக்கில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை உறுதி செய்வதற்காக பிரதமர் மோடி அயராது உழைத்து வருகிறார். கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதே அவரது நோக்கம். 10 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கிமின் நிலைமைக்கும் இப்போது உள்ள நிலைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்களே பகுப்பாய்வு செய்து கொள்ளலாம்.” என தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
சிக்கிம் மாநில பாஜக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள்
** சிக்கிமில் பெண்களால் நடத்தப்படும் 'அம்மா கேன்டீன்' என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும்
** சிக்கிம் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் 371F இன் சாராம்சம் பாதுகாக்கப்படும்
** சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும்
** சாலை, ரயில், விமான போக்குவரத்து என முக்கியமான திட்டங்களின் பலதரப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு உறுதி செய்யப்படும்
** விவசாய உட்கட்டமைப்புக்காக ரூ.500 கோடி மதிப்பில் நிதியம் உருவாக்கப்படும்
** அடுத்த 5 ஆண்டுகளில் சிக்கிமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
** விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் விவசாய உள்கட்டமைப்பு சீரமைக்கப்படும்
** சிக்கிமில் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (National Institute of Design) அமைக்கப்படும்
** பிம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்படும் ரூ.6000 நிதி ரூ.9000ஆக உயர்தப்படும்
** பெண்கள் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும்; சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும்.
** சிக்கிமில் மருத்துவ அறிவியலுக்கான பிராந்திய நிறுவனம் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Loksabha Elections 2024: கடலூர் தொகுதி கள நிலவரம் என்ன?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் தொடக்கப்பட்டது. மக்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் தரமண உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு அம்மா உணவகம் முன்மாதிரியாகவும் விளங்குகிது. இதேபோன்ற உணவகங்களை அண்டை மாநிலங்களும் தமிழ்நாட்டை பார்த்து தொடங்கியுள்ள நிலையில், வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் ஆட்சி வந்தால் அம்மா உணவகம் திறக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 32 தொகுதிகளை கொண்ட சிக்கிம் சட்டப்பேரவைக்கும், அம்மாநிலத்தில் உள்ள ஒரேயொரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள ஒற்றை மக்களவைத் தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.