மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என தேவேந்திர பட்நாவிஸிடம் அமித் ஷா கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது. நரேந்திர மோடி வருகிற 9ஆம் தேதி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளார்.
undefined
நடந்து முடிந்த தேர்தலில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக சிறப்பாக செயல்படவில்லை. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக மக்களவைக்கு அதிக எம்.பி.க்களை அனுப்பும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஒன்றுபட்ட சிவசேனாவுடன் பாஜக கூட்டணி வைத்தது. அந்த தேர்தலில் அக்கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில் 41 இடங்களில் வென்றது.
ஆனால், இந்த முறை சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்தது. மகாயுதி என்றழைக்கப்பட்ட இந்த கூட்டணி 2024 தேர்தலில் அம்மாநிலத்தில் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இத்தனைக்கும் அக்கூட்டணி ஆட்சிதான் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்து வருகிறது.
5 நாட்களில் ரூ.535 கோடி உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவி சொத்து மதிப்பு!
இந்த நிலையில், மோசமான செயல்பாடுக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிர துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்நாவிஸ் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார். சக துணை முதல்வரான அஜித் பவார் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் மாநிலத்தில் கூட்டணியின் செயல்பாடு குறித்து பட்நாவிஸ் விவாதித்தார். அதன்போது அவரது ராஜினாமா குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, டெல்லியில் அமித் ஷாவை அவரது இல்லத்தில் தேவேந்திர பட்நாவிஸ் சந்தித்து பேசினார். அப்போது, மகாராஷ்டிர துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என தேவேந்திர பட்நாவிஸிடம் அமித் ஷா கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரா அரசாங்கத்திற்காக தொடர்ந்து பணியாற்றுமாறும், மாநிலத்தில் பாஜகவை புத்துயிர் பெறுவதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறும் பட்நாவிஸிடம் அமித் ஷா கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. நீங்கள் ராஜினாமா செய்தால், அது பாஜக தொண்டர்களின் மன உறுதியை பாதிக்கும். எனவே இப்போது ராஜினாமா செய்ய வேண்டாம் எனவும் அமித் ஷா அவரிடம் கூறியதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.