ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!

By Manikanda PrabuFirst Published Jun 7, 2024, 6:00 PM IST
Highlights

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

Latest Videos

புதிய அரசு அமைவதற்கு ஏதுவாக பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்துள்ளார். அதனை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக் கூட்டணியின் கூட்டத்தில் அக்கூட்டணி கட்சித் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இதற்கான தீர்மானத்தை இன்று ஒருமனதாக நிறைவேற்றினார். இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். நாடாளுமன்ற குழு தலைவராக மோடியை தேர்வு செய்த  கடிதத்தை வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ஆட்சியமைக்க பிரதமர் மோடி உரிமை கோரினார். முன்னதாக, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாளை மாலை புதிய எம்.பி.க்கள் கூட்டம்: திமுக அறிவிப்பு!

நரேந்திர மோடி வருகிற 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். இத்தகவலை பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி உறுதிபடுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க சுமார் 8000 பேருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அழைப்பு விடுத்திருக்கிறது.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் பட்சத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் இரண்டாவது தலைவர் என்ற பெருமையை மோடி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!