தமிழகத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்: நரேந்திர மோடி பெருமிதம்!

By Manikanda Prabu  |  First Published Jun 7, 2024, 4:47 PM IST

தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்


தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இதற்கான தீர்மானத்தை இன்று ஒருமனதாக நிறைவேற்றினார்.

என்.டி.ஏ. கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடியின் பெயரை முதலில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அமித் ஷா வழிமொழிந்தார். பின்னர் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் அதனை ஆதரித்தனர். இதன் மூலம் அவர் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

Tap to resize

Latest Videos

அப்போது, உரையாற்றிய மோடி இந்திய வரலாற்றில் தேசிய ஜனநாயக கூட்டணியை மிகவும் வெற்றிகரமான கூட்டணி என்றார். இந்திய  வரலாற்றில் இது மிகவும் வெற்றிகரமான கூட்டணி வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.  கட்சிக்காக உழைத்த அனைவரையும் நான் தலைவணங்குகிறேன் என்றும் மோடி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் பா.ஜ.கவின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக புகழாரம் சூட்டினார். “நான்  தமிழ்நாடு மாநில தேசிய ஜனநாயக கூட்டணியினருக்கு  வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். அங்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணிக் குடும்பம் பெரிதாக வளர்ந்து  இருக்கிறது.  அங்கு பல  கூட்டணியினர் பலர் இருந்தார்கள். அங்கு தேர்தல் களம் கடினம் என்று தெரிந்தும், அவர்கள் நம் தேசிய ஜனநாயக கூட்டணியின் கொடியை உயரப் பறக்க விடுவதில் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். அதனால் தான் இன்று தமிழ்நாட்டில், நம்மால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாவிட்டாலும்,  வாக்கு சதவீதம் உயர்ந்துள்ள வேகத்தைப் பார்த்தாலே, அது மிகத் தெளிவாக தமிழகத்தில் நாளை என்ன நடக்கப் போகிறது என்கிற செய்தியை சொல்கிறது.” என நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமராக மோடி பதவியேற்பதில் உடன்படாத ஆர்.எஸ்.எஸ்.?

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது.

தேர்தல் முடிவுகளில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக அதிகபட்சமாக 26.93 சதவீத வாக்குகளை பெற்றது. அடுத்தபடியாக, அதிமுக 20.46 சதவீத வாக்குகளை பெற்றது. பாஜக 11.24 சதவீத வாக்குகளை பெற்று தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளது. இதனால், அதிமுகவுடன் கூட்டணி வைக்காமலேயே தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்கும் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்ததால் தான் பாஜகவால் இத்தனை வாக்கு சதவீதம் பெற முடிந்தது என அரசியல் விமர்சகர்கள் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!