
2024ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், 2025 புத்தாண்டை கொண்டாட்டத்துடன் வரவேற்க உலகமே தயாராகி வருகிறது. இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவர் மௌலானா முப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, புத்தாண்டைக் கொண்டாடுவதைத் தவிர்க்குமாறு முஸ்லிம்களை வலியுறுத்தியுள்ளார்.
கடுமையான ஃபத்வா அறிவிப்பை வெளியிடுடள்ள அவர், இத்தகைய கொண்டாட்டங்கள் கண்டிப்பாக இஸ்லாத்திற்கு எதிரானவை என்று கூறியுள்ளார். வாழ்த்து கூறுவது, புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பது ஆகியவை இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானவை என்று ரஸ்வி கூறியுள்ளார்.
"இது முஸ்லிம்கள் பெருமைப்படவோ கொண்டாடவோ வேண்டிய சந்தர்ப்பம் அல்ல. புத்தாண்டு கொண்டாட்டங்கள் கிறிஸ்தவ மரபுகளில் வேரூன்றியவை. புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஆடல், பாடல் போன்ற செயல்பாடுகளும் நடக்கும். சந்தேகத்திற்கு இடமின்றி, அவை இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த செயல்கள் ஷரியாவுக்கு எதிரானது என்பதால், முஸ்லிம்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடக் கூடாது" என்று அவர் அறிவித்துள்ளார்.
ஹோட்டல் அறையில் இறந்த கிடந்த நடிகர்! 2 நாட்களாக உள்ளே நடந்தது என்ன?
இத்தகைய கொண்டாட்டங்கள் இஸ்லாமிய விழுமியங்களை களங்கப்படுத்துவதாகவும், இந்த பாவமான செயல்களில் இருந்து விலகி இருக்குமாறும் முஸ்லிம் இளைஞர்களை எச்சரித்ததாகவும் ரஸ்வி கூறுகிறார். முஸ்லிம்கள் புத்தாண்டு விருந்துகளில் கலந்துகொள்ளும் போக்கை விமர்சித்த அவர், இதுபோன்ற செயல்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானது என்றும் கூறினார்.
ஆனால், சூஃபி அறக்கட்டளையின் தேசியத் தலைவரான காஷிஷ் வார்சி, ரஸ்வியின் ஃபத்வாவை வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். இது முஸ்லிம்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாகும். இதனால், சமூகத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் போவதாகவும் வார்சி தெரிவித்துள்ளார்.
"புத்தாண்டு கொண்டாட்டங்கள் மக்களை ஒன்றிணைத்து, மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையைப் பரப்புகின்றன" என்று வார்சி கருதுகிறார். “இஸ்லாமிய நாட்காட்டி மொகரத்துடன் தொடங்குகிறது என்பது உண்மைதான். ஆனால், புத்தாண்டு கொண்டாட்டங்களை 'ஹராம்' என்று முத்திரை குத்துவது அதிகமாகத் தெரிகிறது. சமூகங்களுக்கிடையில் ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்." என வார்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரோவின் ஸ்பெடெக்ஸ் திட்டம்! PSLV C-60 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!