ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 294 பேர் பலியான நிலையில், மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து விபத்தில் சிக்கியிருந்த 21 ரயில் பெட்டிகள் தண்டவாள பகுதியில் இருந்து முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என கூறப்படுகிறது.
ரயில் விபத்து - மீட்பு பணி தீவிரம்
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கடந்த 2ஆம் தேதி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின், பாலசோர் அருகே சென்று கொண்டிருந்த போது தவறான சிக்னல் காரணமாக லூப் லைனில் இருந்த கூட்ஸ் வண்டியில் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் சில அடுத்த தண்டவாளத்தில் சென்று விழுந்தன. அப்போது அடுத்த தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதன் காரணமாக இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் 294 பேர் பலியான நிலையில், 1000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீரமைப்பு பணியில் 1000 தொழிலாளர்கள்
தென் மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய ரயில் வழித்தடம் காரணமாக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு மாற்று வழியில் இயக்கப்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விபத்து நடைபெற்ற சம்பவ இடத்தில் ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகள், பொது மேலாளர், முதன்மை அதிகாரிகள் மற்றும் பிற பிரிவு அதிகாரிகளுடன் தடம் புரண்ட இடத்தில் சீரமைப்புப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீட்பு மற்றும் சீரமைப்பு பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது. 7 பொக்லைன் இயந்திரங்களும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இரண்டு விபத்து நிவாரண ரயில்களும் தளத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 140 டன் ரயில்வே கிரேன், மற்றும் மூன்று ரோடு கிரேன்கள் மறுசீரமைப்புக்காக தளத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விரைவில் ரயில் போக்குவரத்து
விபத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பாலசோர்-ஹவுரா மற்றும் பத்ரக் - சென்னை இடையே சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வை இயக்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்களை ஏற்றிச் செல்ல ஹவுராவில் இருந்து பாலசோருக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகளை முடிக்க ரயில்வே போர்க்கால அடிப்படையில் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதனிடையே இரவு முழுவதும் நடைபெற்ற சீரமைப்பு பணியையடுத்து விபத்து பகுதியில் சிக்கியிருந்த 21 ரயில் பெட்டிகளும் அகற்றப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சம்பவ இடத்தில் புதிய ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணியானது தொடங்கப்படவுள்ளது. இதன் காரணமாக விபத்து நடைபெற்ற இடத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்