
அசாம் மாநிலத்தில் வங்கதேச நாட்டை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அன்சருள் இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 12 பேர் அசாம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையது. அசாம் மாநிலம் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களை குறித்து வைத்து அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராகவும், மாஸ்டர் மைன்ட்டாகவும் செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றனர். இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டனர். தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளனர்.
இனிமேலாவது குறையுமா! டிசம்பர் 1ம் தேதி முதல் சிகிரெட் பாக்கெட்டில் புதிய படம், எச்சரிக்கை
தற்போது இந்த பயங்கரவாத அமைப்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இளைஞர்களை குறிவைத்துள்ளது. வடகிழக்கு மாநில இளைஞர்களுக்கு தங்களது அழைப்பு சென்று சேர வேண்டும் என்று அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வங்க மொழியில் இதழ்களை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்கொய்தாவுடன் தொடர்புடைய வங்கதேசத்தில் இயங்கி வரும் அன்சருள் இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 12 பேர் அசாமில் கைது செய்யப்பட்டதாக அந்த மாநில தலைமை போலீஸ் அதிகாரி பாஸ்கர் ஜோதி மகந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருக்கும் தகவலில், ''வடகிழக்கு மாநிலங்களில் தங்களை வேரூன்ற அல் கொய்தா அமைப்பு ஆர்வம் காட்டி வருகிறது. அல் கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அசாம் மாநிலத்துக்கு செல்லுங்கள் என்று தனது அமைப்புக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த அமைப்பின் காலாண்டு இதழ், வங்க மொழியில் வெளியாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தானது'' என்று டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்து இருக்கும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அசாம் மாவட்டங்களில் இருந்து இதுவரை இந்த அமைப்புடன் தொடர்புடைய 12 பேரை கைது செய்தபின்னர் போலீஸ் அதிகாரி ஜோதி மகந்தா தெரிவித்துள்ளார். குவஹாத்தியில் இருந்து ஒருவர், மோரிகாவன் மாவட்டத்தில் இருந்து 8 ஜிகாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர மொய்ராபாரி காவல் நிலையத்திற்கு உள்பட்ட இடத்தில் தனியார் மதரஸா நடத்தி வரும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக மோரிகாவன் தலைமை போலீஸ் அதிகாரிஅபர்ணா நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அபர்ணா கூறுகையில், ''தனியார் மதரஸா நடத்தி வந்த முப்தி முஸ்தபா பயங்கரவாத அமைப்புடன், சட்ட விரோத பண பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மதரஸாவைப் பயன்படுத்தி நிதி சேகரித்து வந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றத்தின் கீழ் இவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முஸ்தபாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ''தேசிய கூட்டமைப்புடன் இணைந்து மாநிலத்தில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தை அழிப்பதற்கு சில தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களை கண்டறிந்து கைது செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களது இருப்பிடங்கள் அழிக்கப்படும். மூன்று நாட்களுக்கு முன்பு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தில் அனைத்து அரசு மதரஸாக்கள் மூடப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட எட்டு பேர் இன்று அசாம் மாநிலத்தின் பர்பெட்டாவில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.