
அகிலேஷின் சைக்கிளை ‘பஞ்சர்’ ஆக்கிய பா.ஜனதா
உத்தரப்பிரதேச தேர்தலில், சமாஜ்வாதி கட்சியை வீழ்த்தியதன் மூலம், அகிலேஷ் யாதவின் ‘சைக்கிளை’ பா.ஜனதா ‘பஞ்சர்’ ஆக்கி உள்ளது.
இளம் வயது முதல்வர்
43 வயதான அகிலேஷ் யாதவ், சமீபத்தில் ஏற்பட்ட குடும்ப மோதலைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்தித்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலுக்குப்பின், நாட்டிலேயே இளம் வயது முதல்-அமைச்சராக, தனது 38-வது வயதில் பதவி ஏற்றார்.
வெளிநாட்டில் பட்டம்
கடந்த 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி, உ.பி.யின் எட்டாவா மாவட்டம் சைபை கிராமத்தில் அகிலேஷ் பிறந்தார். ராஜஸ்தானில் உள்ள தோல்பூர் ராணுவ பள்ளியில் படிப்பை முடித்த அவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொறியல் பிரிவில் பட்டம் பெற்றார்.
பின்னர் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கைலைக் கழகத்திலும் அதே பிரிவில் பொறியல் பட்டம் பெற்றார். கடந்த 2000-வது ஆண்டில், கன்னோஜ் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு அகிலேஷ் வெற்றி பெற்றார்.
சைக்கிள் பிரசாரம்
அதன்பின் தொடர்ச்சியாக மூன்று முறை அவர் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உ.பி. மாநில முதல்-அமைச்சராக அவர் பதவி ஏற்றார்.
இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் அவர் நடத்திய சைக்கிள் ஊர்வலங்களில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அவர் சார்ந்த யாதவர் சமூகம் மட்டுமின்றி மற்ற சமூக இளைஞர்களும் அவருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
குடும்ப மோதல்
சமாஜ்வாதி கட்சியின் மையப்புள்ளியான ‘யாதவ்’ குடும்ப மோதல் கடந்த 2016-ம் ஆண்டில் தொடங்கியது.
அகிலேஷின் சித்தப்பாவான சிவபால் யாதவ், பிரபல ‘குண்டர் படை தலைவரான’ முக்தர் அன்சாரியின் குவாமி எக்தா தளம் கட்சியை சமாஜ்வாதியுடன் இணைத்ததைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியது.
காங்கிரசுடன் கூட்டணி
இதன் மூலம் தந்தை முலாயம்சிங்கும் தனயன் அகிலேஷ் யாதவும் இரு துருவங்களாக மோதிக்கொண்டனர். முலாயம்சிங்கின் ஒன்று விட்ட சகோதரரான ராம்கோபால் யாதவ், அகிலேஷுக்கு ஆதரவாக இருந்தார்.
தேர்தல் நெருங்கி வந்த நிலையில், அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதிக்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம், அதன் அதிகாரபூர்வ சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது. அதன்பின் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அகிலேஷ் தேர்தலை சந்தித்தது, முலாயம்சிங்குக்கு பெரிதும் ஏமாற்றத்தை அளித்தது.
டிம்பிள் யாதவ்
அவர் அதிகமாக பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்த நிலையில், தற்போது பா.ஜனதாவால் அகிலேஷ் யாதவின் ‘சைக்கிள்’ பஞ்சர் ஆக்கப்பட்டு உள்ளது.
1999-ம் ஆண்டில் டிம்பிள் யாதவை அகிலேஷ் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். டிம்பிள் தற்போது கன்னோஜ் தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.