
2019-ல் தேர்தலையும் மறந்துடுங்க;….உ.பி.-யில் ஏற்பட்டது மோடி சுனாமி..‘அந்தர்பல்டி’ அடித்த உமர் அப்துல்லா
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மோடிக்கு நிகரில்லை
சுருக்கமாக சொல்லப்போனால் மோடிக்கு நிகராக பெரும்பான்மை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு தலைவரும், பாஜகவுக்கு நிகரான ஒரு கட்சியும் இங்கு இல்லை. எதிர்க்கட்சிகளாகிய நாம் எல்லோரும் 2019 மக்களவை தேர்தலை மறந்து விடலாம். 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை கொள்ளலாம். உத்தரப்பிரதேசத்தில் இப்படி ஒரு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று தேர்தல் வல்லுனர்கள் கூட எதிர்பார்க்கவில்லை. அங்கு ஏற்பட்டிருப்பது ஒரு சுனாமி. உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மை மக்களின் மனதை பாஜக வென்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.
‘வீழ்த்த முடியும்’
பாஜக என்பது வீழ்த்தவே முடியாத கட்சி அல்ல. இதனை பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள் நமக்கு உறுதியாக கூறுகின்றன. வெறுமனே பாஜகவை விமர்சிப்பதை விட்டு விட்டு அக்கட்சியை வீழ்த்த ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளை கையில் எடுக்க வேண்டும். நம்மால் சிறப்பாக செயலாற்ற முடியும் என்ற நம்பிக்கையை வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். பஞ்சாபில் நல்லதொரு சாதகமான முடிவு ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் மாற்று சக்தியாக அமையும் அளவுக்கு அக்கட்சி வளரவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.