டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது ஏர் இந்தியா... 100% பங்குகளும் விற்பனை!!

By Narendran SFirst Published Jan 27, 2022, 6:34 PM IST
Highlights

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.  

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது.  ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. கடந்த 1953 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. தற்போது கடும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வந்தது. அதனை வாங்க ஆளில்லாமல் இருந்தது. தற்போது மத்திய அரசு நிறுவனமாக செயல்படும் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

கோவிட் தொற்று சூழலுக்கு பின்பு ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. ஏர் இந்தியாவை வாங்க தலாஸ் நிறுவனம் குறிப்பிட்ட மதிப்பு 18,000 கோடி ரூபாய் ஆகும். இதில் 15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்கான பாகமாகும், மீதமுள்ளவை மத்திய அரசுக்கு செலுத்தப்படும்.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் இன்று மத்திய அரசு இன்று முறைப்படி ஒப்படைத்தது. டாடா குழுமம் ஏர் இந்தியாவின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து ஒப்படைக்கும் முன்பாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்து பேசினார். இந்தக் கூட்டத்திற்குப் பின்பு ஏர் இந்தியாவின் உரிமையை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஏர் இந்தியாவின் 100% பங்குகளை தலேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நிர்வாகக் கட்டுப்பாட்டுடன் மாற்றும் நடவடிக்கை முடிந்த பிறகு டாடா நிறுவனத்தின் புதிய வாரிய உறுப்பினர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

click me!