எம்.பி. பங்களாவை காலி பண்ணுங்க... ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பிய மக்களவை வீட்டு வசதி குழு

By SG BalanFirst Published Mar 27, 2023, 8:33 PM IST
Highlights

ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வசித்து வரும் பங்களாவை காலி செய்யுமாறு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அரசு ஒதுக்கிய பங்களாவை காலி செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதிக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கூறுகையில், "இது ராகுல் காந்தி மீதான பாஜகவின் வெறுப்பைக் காட்டுகிறது. தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்கு, அதே வீட்டில் தொடர்ந்து தங்கலாம். 30 நாள் காலத்திற்குப் பிறகு, சந்தை நிலவரப்படி வாடகை செலுத்தி அதே வீட்டில் தொடர்ந்து தங்கலாம். ராகுல் காந்தி இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ளவர்" என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி மோடி என்ற பெயர் பற்றி பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் மார்ச் 22ஆம் தேதி சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து, மார்ச் 23ஆம் தேதி மக்களவை செயலகம் அவரை எம்.பி.யில் இருந்து தகுதிநீக்கம் செய்தது.

2 மாத குழந்தையைக் கொன்ற சிறுமிகள்! பொம்மை போல நினைத்து விளையாடியதால் நேர்ந்த விபரீதம்!

2004ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினரான ராகுல் காந்திக்கு டெல்லியில் உள்ள துக்ளக் தெருவில் எண் 12 கொண்ட பங்களா ஒதுக்கப்பட்டது. இப்போது அவர் எம்.பி. பதவியை இழந்துள்ள நிலையில், அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை விட்டு வெளியேறும்படி ராகுல் காந்திக்கு மக்களவை வீட்டு வசதி குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, தகுதிநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதத்தில் அரசு பங்களாவை காலி செய்யவேண்டும். மார்ச் 22 ஆம் தேதி ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், அவர் ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.

இதனிடையே சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது குறிப்பிட்டத்தக்கது.

37 கிராம பெண் குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கிய மருத்துவர்

click me!