காங்கிரஸ் கட்சியில் தீவிரத் தொண்டராக, மூத்த தலைவராகஇருந்த குலாம் நபி ஆசாத் அந்தக் கட்சியிலிருந்து விலகிய நிலையில் பாஜகவில் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சியில் தீவிரத் தொண்டராக, மூத்த தலைவராகஇருந்த குலாம் நபி ஆசாத் அந்தக் கட்சியிலிருந்து விலகிய நிலையில் பாஜகவில் சேர்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த குலாம் நபி ஆசாத் கடந்த சில ஆண்டுகளாக ஓரம் கட்டப்பட்டார். காங்கிரஸ் கட்சி கடந்த 2014ம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து தேர்தலில்களில் படுதோல்வியைச் சந்தித்த நிலையில் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் தேவை என்று குலாம் நபி ஆசாத் குரல் கொடுத்தார்.
அவசரச் சட்டத்தை ராகுல் காந்தி கிழித்தபோதே காங்கிரஸ் கதை முடிஞ்சது: குலாம் நபி ஆசாத் குமுறல்
குலாம் நபி ஆசாத்தோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சியில் உள்ள 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி, தேர்தல் நடத்த வலியுறுத்தினார்கள். இந்த சம்பவத்திலிருந்து காங்கிரஸ் தலைமை ஜி23 தலைவர்களை ஓரம்கட்டத் தொடங்கியது. இந்த 23 தலைவர்களுக்கும் முக்கியத்துவம் இல்லாத பதவி வழங்கியது.
இதில் நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சியின் குரலாக மாநிலங்களவையில் ஒலித்துவந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் எம்.பி. பதவியை காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை.
இதனால் காங்கிரஸ் தலைமைக்கும், குலாம் நபி ஆசாத்துக்கும் இடையிலான பனிப்போர் முற்றியது.
ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆதலால், அந்த மாநிலத்துக்கான தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் நியமித்தார். ஆனால்,அவர் நியமித்த சில மணிநேரங்களில் குலாம் நபி ஆசாத் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
இதற்கிடையே மாநிலங்களவைியல் குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடியும் போது, கண்ணீர் மல்கப் பேசினார். அப்போது, எதிர்முனையில் பிரதமர் மோடியும் பாராட்டிப் பேசியது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியுடன் இருக்கும் குலாம் நபி ஆசாத்தை பாஜகவில் சேர்ப்பதற்கான பணிகள் நடப்பதாக ஆங்கில ஊடகங்களிலும் செய்தி வந்தது. காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த குலாம் நபி ஆசாத் பாஜகவின் நிர்வாகத்தையும், விளம்பர யுத்தியையும் புகழ்ந்து பேசிய சந்தர்ப்பங்களும் உண்டு.
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு நம்பிக்கையான முகமும் தேவை, அந்த மாநில மக்களுக்கு நம்பிக்கையான, மிகுந்த அறிந்த நபரும் தேவை என்பதால், குலாம் நபி ஆசாத்தை வலைக்கவும் முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகின.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு: 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு
இந்நிலையில் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய சில மணிநேரத்துக்குள் பாஜக தலைவர்கள் அவரை வாரி அணைக்க காத்திதருந்தனர். பாஜக தலைவர் குல்தீப் பிஷ்னோய் அளித்த பேட்டியில் “ காங்கிரஸ் கட்சி தற்கொலையில் ஈடுபட்டு வருகிறது, தன்னைத்தானே அழித்து வருகிறது என்று கூறுவதில் தவறு ஏதும் இல்லை. பாஜகவில் குலாம் நபி ஆசாத் சேர்ந்தால் வரவேற்கிறோம். பாஜக தலைமை சம்மதித்தால் அவரிடம் நான் பேசி பாஜவுக்கு வருமாறு கேட்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்தியா டுடே நாளேட்டுக்கு குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியில், தான் புதிதாக கட்சித் தொடங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் “ நான் ஜம்மு காஷ்மீருக்குச் சென்று, அங்கு சொந்த மாநிலத்தில் சொந்தமாகக் கட்சி தொடங்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. அதையொட்டி குலாம் நபி ஆசாத் புதிய கட்சியைத் தொடங்கி, பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம். அல்லது மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்கலாம்.