
ஐ.ஐ.டி., என்.ஐ.டி, நீட் தேர்வுகள் எழுத இனி ஆதார் அவசியம்….மத்திய அரசு அதிரடி…
ஐ.ஐ.டி., என்.ஐ.டி, நீட் போன்ற கல்லூரி நுழைவுத் தேர்வுகளை மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் பல ஆண்டு காலமாக ஆள் மாறாட்டம் நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.இத்தகைய முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி இத்தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்று வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனி வரும் காலங்களில் மத்திய அரசுத் தேர்வுகள் எழுத அடையாள அட்டையாக ஆதார் கார்டுகளை பயன்படுத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர், ரேசன் கார்டு, வங்கி பரிவர்த்தனைகள் என அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இனி மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் இதை அடையாள அட்டையாக பயன்படுத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநிலங்கள் தவிர, அனைத்து மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மத்திய தேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு கல்வியகம் ஒன்றை தொடங்குவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இனி இந்த வாரியம் மூலம்தான் என்ஜினீயரிங், மருத்துவம் மற்றும் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.