ஆர்யன் கான் வழக்கில் அதிரடி திருப்பம்... நடிகர் ஷாரூக்கானின் பெண் மேலாளருக்கு பறந்த சம்மன்..!

By Asianet TamilFirst Published Nov 8, 2021, 7:46 PM IST
Highlights

திடீர் திருப்பமாக, நடிகர் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (என்சிபி) விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பியுள்ளது. ஆர்யன் கான் விடுதலை தொடர்பாக பூஜா தத்லானியிடம் தொழிலதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி ஆகியோர் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர் ஷாரூக்கானின் மேலாளருக்கு அதிரடியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அங்கு நடந்த பார்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து பார்ட்டியில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் (23) உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், ஆர்யன் கான் மீது 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

வழக்கு விசாரணையின்போது ஆர்யன் கான் வழக்கு தொடர்பாக ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக சாட்சி ஒருவர் அளித்தப் பேட்டி சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் ஆர்யான் கானை விடுவிக்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு ரூ. 8 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதனால், இந்த வழக்கின் உண்மை தன்மை குறித்து விவாதமே எழுந்தது. மேலும், ஆதாரமே இல்லாமல் ஒரு பிரபல நடிகரின் மகனை 25 நாட்களுக்கு சிறையில் வைக்க முடிகிறது என்று ஆர்யன் கான் தரப்பு வழக்கறிஞரும் பேட்டி அளித்திருந்தார்.

இதற்கிடையே வழக்கின் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே பல வழக்குகளில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக் தன் பங்குக்குக் குற்றம் சாட்டினார். இதுபோன்ற அடுத்தடுத்த திருப்பங்களுக்கு மத்தியில் ஆர்யன் கான் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரி சமீர் வான்கடேவை, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணி மும்பையிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, நடிகர் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு (என்சிபி) விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பியுள்ளது. ஆர்யன் கான் விடுதலை தொடர்பாக பூஜா தத்லானியிடம் தொழிலதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி ஆகியோர் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரிக்கத்தான் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், விசாரணைக்கு ஆஜராக பூஜா தத்லானி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

click me!