சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் காஷ்மீரில் திடீர் பரபரப்பு... அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!

By Thiraviaraj RMFirst Published Oct 4, 2019, 5:08 PM IST
Highlights

காவலில் உள்ள தலைவர்கள் சிலர் தற்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு -காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களாக அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில் அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு வருவதாக தகவல் கூறுகின்றன. 

இது தொடர்பாக காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் ஃபரூக் கான், ‘’இது போன்ற காவலில் உள்ள தலைவர்கள் சிலர் தற்போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற தலைவர்களின் நடவடிக்கைகள் ஆராயப்பட்டு ஒவ்வொருவராக விடுவிக்கப்படுவார்கள்’’என்று அவர் தெரிவித்தார். 

வரும் அக்டோபர் 24- ம் தேதி காஷ்மீரில் பிளாக் கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரரும், தேசிய மாநாட்டு கட்சியின் மாவட்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான தேவேந்தர் ரானா கூறுகையில், செவ்வாய்க்கிழமை இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் என்னை தொடர்பு கொண்டார்.

உங்கள் மீதான தடுப்பு விலக்கிக்கொள்ளப்படுகிறது. இனி நீங்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். கட்சியினரை சந்திக்கலாம்’எனத் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் ராமன் பல்லா, விகார் ரசூல், தேசிய மாநாட்டு கட்சியின் சஜ்ஜத் அகமது கிச்லூ, சுர்ஜித் சிங் சலாதியா உள்ளிட்ட தலைவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட சுமார் 400 தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

click me!