நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், சிபிஐ விசாரணை கோரியும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில், 2024-25 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஆனால், தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டினார். வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், தேர்வு எழுதியவர்களில் 1536 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது, இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றது, குறிப்பாக ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720 / 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருப்பது என நீட் தேர்வு முடிவுகள் தேசிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
undefined
இதனிடையே, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஏபிவிபி மாணவர் அமைப்பினர் வட மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். உடன் இணைந்த வலதுசாரி அகில இந்திய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பினர் நடத்தும் இந்த போராட்டங்கள் கவனம் ஈர்த்துள்ளது.
அந்த வகையில், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரியும் ஏபிவிபி மாணவர் அமைப்பினர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் போராட்டம் நடத்தினர். ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் நீட் எழுதும் மாணவர்கள் பேரணியாக சென்று அஜ்மீர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், நீட் தேர்வை ரத்து செய்யவும், முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜி7 உச்சி மாநாடு: உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
நீட் தேர்வுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பு வினாத்தாள் கசிந்ததாக ஏபிவிபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் அசு ராம் துகியா குற்றம்சாட்டியுள்ளார். இதனை பொருட்படுத்தாமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியும் கோபமும் நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
ஏபிவிபி அஜ்மீர் நகர பொதுச்செயலாளர் உதய் சிங் ஷெகாவத் கூறுகையில், “பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களை போலீசார் வற்புறுத்தினர். ஒருபுறம் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகின்றனர். மறுபுறம் மாணவர்கள் குரல் எழுப்பும்போது, அவர்களின் குரலை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.” என குற்றம் சாட்டினார். நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தேர்வை ரத்து செய்து மீண்டும் மறு நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இளங்கலை நீட் தேர்வு 2024இல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்படுவதாகவும், நீட் 2024 தேர்வில் கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.