
AAP MLA Pathanmajra Shoots at Police and Escapes! பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதான்மஜ்ரா, காவல் துறையினரிடமிருந்து தப்பிச் சென்றார். காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அவர் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் மனைவி பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
போலீசாரை சுட்டு தப்பிய ஆம் ஆத்மி எம்எல்ஏ
சனூர் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன்மஜ்ராவை இன்று காலை ஹரியானாவின் கர்னாலில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், எம்எல்ஏ ஹர்மீத் பதான்மஜ்ராவும் அவரது கூட்டாளிகளும் காவல் துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு அதிகாரியை வாகனத்தால் மோதி காயப்படுத்தி தப்பிச் சென்றனர். எம்எல்ஏவும், அவரது குழுவினரும் வந்த ஒரு வாகனத்தை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மற்றொரு வாகனத்தில் தப்பிச்சென்ற எம்எல்ஏவை கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பதன்மஜ்ரா மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன?
பதான்மஜ்ரா மீது பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் விவாகரத்து பெற்றதாக பொய் சொல்லி, தன்னுடன் உறவைத் தொடங்கியதாக ஒரு பெண் புகார் அளித்ததை அடுத்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. பாலியல் சுரண்டல், மிரட்டல் மற்றும் தவறான விஷயங்களை அனுப்பியதாக அந்த பெண் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர்
தன்னை கைது செய்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பதான்மஜ்ரா குற்றம் சாட்டியிருந்தார். தனது சொந்த அரசுக்கும் AAP மத்திய தலைமைக்கும் எதிராக குரல் கொடுத்ததால் தனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று அவர் முகநூலில் பதிவிட்டார். சமீபத்தில் பஞ்சாப் அரசின் வெள்ள நிவாரணப் பணிகளை பதான்மஜ்ரா விமர்சித்திருந்தார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.