பிகாரில் காங்கிரஸ் - ராஸ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் திருத்தத்திற்கு எதிராகவும், வாக்கு திருட்டு என்ற பெயரிலும் மாபெரும் பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஒருசில கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், “தாய் நம் உலகம். தாய் நம் சுயமரியாதை. சில நாட்களுக்கு முன்பு பாரம்பரியமிக்க பிகாரில் நடந்ததை நான் கற்பனை கூட செய்திருக்கவில்லை. பிகாரில் RJD - காங்கிரஸ் மேடையில் என் தாயாரைத் திட்டினார்கள்... இந்தத் திட்டுக்கள் என் தாயாருக்கு மட்டுமல்ல. இவை நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்” என்று பிகாரில் பெண் தொழில்முனைவோருக்கு எளிதாக நிதி வழங்கும் பிகார் ராஜ்ய ஜீவிகா நிதி சாஃக் சகாரி சங்க் லிமிடெட்டைத் தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி கூறினார். "இதைப் பார்த்து, கேட்ட பிறகு நீங்கள் அனைவரும், பிகாரின் ஒவ்வொரு தாயும் எவ்வளவு மோசமாக உணர்ந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்! என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ, அதே அளவு வலி பிகார் மக்களுக்கும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்...," என்று அவர் கூறினார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் கிட்டத்தட்ட 20 லட்சம் பெண்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, தனது அமரர் தாயார் ஹீராபென் மோடி, தன்னையும் தனது உடன்பிறப்புகளையும் வளர்க்க வறுமைக்கு எதிராகப் போராடியதாகக் கூறினார். "அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும், ஆனாலும் அவர் தொடர்ந்து வேலை செய்தார். நமக்கு உடை வாங்கவும், உணவளிக்கவும் ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பாள். நம் நாட்டில் இதுபோன்ற கோடிக்கணக்கான தாய்மார்கள் உள்ளனர். ஒரு தாய் என்பவர் தெய்வங்களை விட உயர்ந்தவர்" என்று அவர் கூறினார்.
பிகாரில் ராகுல் காந்தியின் பேரணியில் சிலர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயாரைத் திட்டியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.
ராகுல் காந்தியின் பேரணியின் மேடையில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தி மொழியில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதை இந்த வீடியோ காட்டுகிறது. காங்கிரஸ் தலைவர், RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் உடன் பிகாரில் 'வாக்காளர் அதிகார் யாத்திரை' நடத்தி வருகிறார்.
பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இது வருந்தத்தக்கது என்று கூறினார்.
"தர்பங்காவில் நடந்த வாக்காளர் உரிமை யாத்திரையின் போது, காங்கிரஸ் மற்றும் RJDயின் மேடையில் இருந்து மதிப்பிற்குரிய பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது அமரர் தாயாருக்கு எதிராக மிகவும் வருந்தத்தக்க சொற்கள் பயன்படுத்தப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது, நான் அதைக் கண்டிக்கிறேன்," என்று நிதிஷ் குமார் எக்ஸில் குறிப்பிட்டுள்ளார்.