
சமூக நலத்திட்டங்களில் ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தற்போது ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பான் கார்டு உள்பட பல்வேறு காரணங்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருப்பதி உள்பட பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்வதற்கு கூட ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், பல சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக, குழந்தைகளுக்கு சத்துணவு போன்ற திட்டங்களுக்கு ஆதார் எண் கண்டிப்பாக தேவை என்று தெரிவித்தது. இதனை எதிர்த்து பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது,மத்திய அரசு, ஆதார் எண்ணை இணைப்பதின் மூலம், திட்டங்கள் சரியான நபர்களுக்கு முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியும் என்றும், சமூகநல திட்டங்களுக்காக ஆதாரை இணைப்பதற்கு செப்டம்பர் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
இதையடுத்து, சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் முடிவுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.