
நாடு முழுவதும் இருக்கும் 9 ஆயிரம் ஆதரவற்ற இல்லங்கள், காப்பங்களில் இருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் எண்ணை அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களில் பயன் பெறுபவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
இதுவரை 36 திட்டங்களின் பயணாளிகள், தங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக திட்டத்தோடு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாட்டில் உள்ள 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆதரவற்ற இல்லங்கள், காப்பகங்களில் இருக்கும் ஒரு லட்டத்திக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதார் எண் வழங்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவர்களின் அங்க அடையாளங்கள், விரல்ரேகை குறிக்கப்பட்டு, விரைவில் ஆதார் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அந்த குழந்தைகள் காப்பகங்களில் இருந்து காணாமல் போனால், எளிதாக கண்டுபிடிக்க உதவும்.
சாலை ஓரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆதார் வழங்கும் திட்டத்தை எங்கள் அமைச்சகம் சமீபத்தில் தொடங்கி வைத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், கொத்தடிமை தொழிலாளர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இருக்கும் குழந்தைகளும் ஜூன் 30-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
இது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுதுறை அமைச்சர் மேனகா காந்தி நிருபர்களிடம் கூறுகையில், “ நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள அட்டை வேண்டும். அது ஆதார் அட்டையாக இருப்பது சிறப்பானதாகும்.
ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் மக்களும் எளிதாக ஆதார் எண் பதிவுசெய்ய உதவ சிறு கடைகள் இருக்கின்றன. நாங்களும் 24 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.