
பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும்குடும்பத்தில் உள்ள பெண்கள் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் பெறவும் இனி ஆதார் கட்டாயம் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சமையல் கியாஸ் சிலிண்டர் பெறும் பெண்கள் மே மாதம் இறுதிக்குள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் மோடியால் கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பல்லியா நகரில்,உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் 5 கோடி குடும்பங்களுக்கு 2019-ம் ஆண்டுக்குள் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் அளிக்க திட்டமிடப்பட்டது.
ஒரு இணைப்பு ஒவ்வொன்றுக்கும் ரூ.1600 மதிப்பில் தரப்பட்டது. இந்த திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு இதுவரை 1.67 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இன்னும் இந்த திட்டத்தில் 3.23 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட உள்ளனர்.
உஜ்வாலா திட்டத்தில் போலி பயனாளிகளை தடுக்கவும்,மானியம் சரியான நபர்களுக்கு சென்று சேரவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இந்த மாத இறுதிக்குள் அரசின் 50-க்கும் ேமற்பட்டதிட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற முறையை அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நாட்டில் இப்போது 99 சதவீதம் இளைஞர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுவிட்டது.
ஆதலால், உஜ்வாலா திட்டத்தின் பயணாளிகள் ஆதார் எண்ணை தங்களின் எல்.பி.ஐி. எண்ணுடன் இணைக்காமல் இருந்தால், மே 31-ந்தேதி இறுதிக்குள் இணைக்க வேண்டும். அல்லது விரைவில் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் சரியான பயனாளிகளுக்கு மானியம் நேரடியாக சேரும் என அரசு நம்புகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டம், கல்வி உதவித் தொகை பெறும் திட்டம் என அனைத்திலும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ள நிலையில், இப்போது இலவச சமையல் சிலிண்டர் பெறுவதற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கியுள்ளது மத்திய அரசு.