
ஆதார் அட்டைக்காக குடிமக்களிடமிருந்து பெறப்படும் பயோ மெட்ரிக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அரசு, ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மானியம் வழங்குவதில் ரூ.49 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது.
இது குறித்து ஆதார் திட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் (யுஐடிஏஐ) அமைப்பு வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
அத்துமீறல் இல்லை
"ஆதார் பயோமெட்ரிக் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்ற புகாருக்கே இடமில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஆதார் சரிபார்ப்பின்படி 400 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன.
ஆதார் தகவல் திருடப்பட்டதாக வந்த புகார்கள் அனைத்தையும் மிகக் கவனமாக நாங்கள் ஆய்வு செய்தோம் ஆனால் அப்படி எந்த ஒரு திருட்டு அத்துமீறலும் நடக்கவில்லை என்பதே உண்மை.
பாதுகாப்பானது
ஆதார் அடிப்படையிலான தனிநபர் தகவல் சரிபார்க்கும் முறை சமகாலத்தில் உள்ள மற்ற நடைமுறைகளைக் காட்டிலும் பாதுகாப்பானது.
தகவல் திருட்டு ஏதாவது நடைபெறுவம் சந்தேகம் ஏற்பட்டால்கூட ஆதார் நடைமுறையில் உடனடியாக அதனைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பிருக்கிறது.
செய்தித்தாள் ஒன்றில் வெளியான 'ஆதார் தகவல் திருட்டு' குறித்து செய்தி வெளியாகி இருந்தது.
வங்கி ஊழியர்
அது குறித்த விசாரணையின்போது, வங்கி ஒன்றின் பிசின்ஸ் தொடர்பு பணிகளை மேற்கொண்டிருந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தனது ஆதார் பயோமெட்ரிக் தகவலை அவரே மாற்றியமைக்க முயன்றிருக்கிறார். அப்போது, அதை ஆதார் பாதுகாப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
4.47 கோடி வங்கிக்கணக்குகள்
அரசின் நல்லாட்சிக்கும் மக்களுக்கு அதிகாரமளித்தளிலும் ஆதாரின் பங்கு மிக முக்கியமானது. ஆதார் மூலம் 4.47 கோடி மக்கள் கேஒய்சி திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளை தொடங்கியிருக்கின்றனர்.
ஆதார் எண்கள் வங்கிக்கணக்குகளுடன் இணைக்கப்பட்டு மானியம் வழங்குவதால் அரசின் கருவூலத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.47 ஆயிரம் கோடி சேமிப்பு கிடைத்துள்ளது.
கிரிமினல் குற்றம்
அதே வேளையில், ஆதார் அட்டையில் இருக்கும் பயோமெட்ரிக் தகவல்களை தவறாக பயன்படுத்துவது ஆதார் சட்டப்படி கிரிமினல் குற்றம் ஆகும்’’.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.