
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா குஜாராத் மாநிலம் ஜாம் நகர் வடக்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவர், பாஜகவை சேர்ந்த பெண் எம்.பி., பூனம்பெண் மடம் மற்றும் அதே கட்சியை சேர்ந்த மேயர் பினா கோத்தாரி ஆகிய இருவருடனும் வார்த்தை போரில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில், பாஜக எம்.பி., பூனம்பெண் மடம் முதலில் மரியாதை செலுத்தினர். பின்னர் மரியாதை ரிவபா ஜடேஜா மரியாதை செலுத்தியபோது, அவரது காதில் விழும்படி, அவர் குறித்து பூனம்பெண் மடம் விமர்சித்ததாக தெரிகிறது. இதனை கேட்ட ரிவபா ஜடேஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ரிவபா ஜடேஜா கூறுகையில், “முதலில் மரியாதை செலுத்திய எம்.பி. பூனம்பென் மடம் காலணிகளுடன் மரியாதை செலுத்தினார். நான், எனது காலணிகளை கழற்றி வைத்து விட்டு மரியாதை செய்தேன். அப்போது, பிரதமரும் ஜனாதிபதியும் கூட இதுபோன்ற நிகழ்ச்சிகளில் செருப்புகளை கழற்ற மாட்டார்கள், ஆனால் சில அறியாமை மக்கள் அதி புத்திசாலிகளாக தங்களை காட்டிக் கொள்கின்றனர் என உரத்த குரலில் பூனம்பென் மடம் தெரிவித்தார். அவரது கருத்து எனக்கு பிடிக்கவில்லை. அதனால் சுயமரியாதைக்காக எனது தரப்பு நியாயத்தை முன்வைத்தேன்.” என்றார்.
மேலும், “காலணிகளை கழற்றி வைத்து விட்டு மரியாதை செய்து நான் தவறு இழைத்து விட்டேனா?” எனவும் ரிவபா ஜடேஜா கேள்வி எழுப்பியுள்ளார். மேயர் பினா கோத்தாரி தேவையில்லாமல் தலையிட்டு எம்.பி.க்கு ஆதரவாக பேசியதால் அவரையும் வசைபாடியதாக ரிவபா ஜடேஜா தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ., எம்.பி., மேயர் ஆகியோருக்கு இடையேயான இந்த வாக்குவாதம் குஜராத் பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!