சஞ்சய் சாரங்கிபூர் தனது நண்பராக இருந்தார் என்றும் ஆனால் நிலம் தொடர்பான தகராறில் இருவரும் பிரிந்த பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தொடர்பில் இல்லை என்றும் ரஷ்மி வர்மா சொல்கிறார்.
பீகாரின் சம்பரான் மாவட்டத்தில் உள்ள நர்கதியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாஜக பெண் எம்.எல்.ஏ., ரஷ்மி வர்மா, தனது அந்தரங்கப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ரஷ்மி வர்மா தனது பழைய நண்பரான சஞ்சய் சாரங்கிபூருடன் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் தன்னைக் களங்கப்படுத்துவதற்காக போட்டோஷாப் செய்யப்பட்டவை என்று வர்மா குற்றம்சாட்டுகிறார். இது தொடர்பாக அவர் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
சஞ்சய் சாரங்கிபூர் தனது நண்பராக இருந்தார் என்றும் ஆனால் நிலம் தொடர்பான தகராறில் இருவரும் பிரிந்த பின், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தொடர்பில் இல்லை என்றும் ரஷ்மி வர்மா சொல்கிறார்.
“உலகில் சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. யார் வேண்டுமானாலும் எந்த இடத்திலிருந்தும் யாருடைய புகைப்படங்களையும் இஷ்டபடி மாற்றலாம். நான் தற்போது பாட்னாவில் இருக்கிறேன். இதைச் செய்த அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளேன்” என்று ரஷ்மி வர்மா தெரிவித்துள்ளார்.
“புகைப்படங்களில் காணப்படும் நபரிடம் பேசினேன். அவரும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய உள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை என்னுடன் இணைந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது சில விஷயங்களில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இப்போது இதுபோன்ற படங்களை பகிர்வதால் யாரும் எங்களை இழிவுபடுத்த முடியாது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” எனவும் எம்எல்ஏ வர்மா கூறியுள்ளார்.
சஞ்சய் சாரங்கிபூரும் மோதிஹாரியில் இணையத்தில் பகிரப்பட்ட படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்று புகார் அளித்துள்ளார்.
“நான் சில வருடங்களுக்கு முன்பு ரஷ்மி வர்மாவுடன் நல்ல உறவில் இருந்தேன். அவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தேன். நான் ரஷ்மி வர்மாவிடம் இருந்து ஒரு நிலத்தை வாங்க விரும்பினேன்ழ. அதன் விலை ரூ.12 லட்சம். நான் அவரிடம் ரூ.10 லட்சம் ரொக்கமாக கொடுத்திருந்தேன். அவரும் ஒப்பந்தத்தின் நகலைக் கொடுத்தார். இருப்பினும், நிலத்தைப் பதிவுசெய்ய வந்தபோது, பதிவுக்கு மறுத்துவிட்டார்” என்று சஞ்சய் கூறுகிறார்.
"நான் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஓய்வில் இருக்கிறேன்” எனவும் அவர் சஞ்சய் சாரங்கிபூர் கூறினார். மோதிஹாரியில் வசிக்கும் சஞ்சய் சாரங்கிபூர் இப்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருக்கிறார்.