
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள எல்மகுண்டா கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்த தொலைதூர கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில மின்பகிர்வு நிறுவன லிமிடெட் உடன் ஒருங்கிணைந்து பணியாற்றிய மாவட்ட காவல்துறையின் முயற்சியால் ஆகஸ்ட் 14 அன்று அந்த கிராம மக்களுக்கு மின்சாரம் கிடைத்தது.
எல்மகுண்டா கிராமத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி வரை மின்சார வசதி இல்லை. இதனால் அந்த கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். முன்னதாக நக்சல்களின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கிராமத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கவும் கிராம மக்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரி கூறினார். கிராம மக்கள் நக்சலைட்டுகளிடம் இருந்து விலகி இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
2024 மக்களவை தேர்தலில் மோடி மேஜிக் வெல்லுமா? கருத்துக்கணிப்பு முடிவுகள் என்ன சொல்கின்றன?
6 மாதங்களுக்கு முன்பு எல்மகுண்டாவில் பாதுகாப்புப் படைகளின் முகாம் நிறுவப்பட்டது, இது வளர்ச்சிப் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) பணியாளர்களும் பணியில் பங்களித்தனர். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் பிற ஏஜென்சிகளின் முயற்சிகள் கிராமவாசிகளுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளன.
இந்த தொலைதூர கிராமங்களில் உள்ள பாதுகாப்பு முகாம்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சி மையங்களாக செயல்படுவதாக பஸ்தார் பகுதி காவல்துறை அதிகாரி சுந்தர்ராஜ் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுக்மா மாவட்டத்தின் எல்மகுண்டா கிராமத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நடந்தது. கடந்த ஆண்டு நக்சல் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்ட கிராமத்தின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது,'' என்றார்.
பஸ்தர் பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாம்கள் செயல்பாட்டுப் பணிகளைச் செய்வது மட்டுமல்லாமல், உள்ளூர் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து சாலை கட்டுமானம், மின்மயமாக்கல், பள்ளிகள், அங்கன்வாடி மற்றும் சுகாதார மையங்களைத் திறப்பது போன்ற மேம்பாட்டுப் பணிகளையும் எளிதாக்குகிறது என்று மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்பு முகாம்கள் உள்ளூர் மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய பல உதாரணங்களில் எலாம்குட்னா கிராமமும் ஒன்று என்றார். சுக்மா காவல் கண்காணிப்பாளர் (SP) கிரண் சவான் கூறுகையில், நக்சலிசத்தை ஒழிக்கவும், அமைதியற்ற கிராமங்களில் கிராம மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் பாதுகாப்பு முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. எல்மகுண்டா கிராமத்தில் உள்ள வீடுகளில் மின்சாரம் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமளிக்கும், குழந்தைகளின் சிறந்த கல்வியை செயல்படுத்தும் மற்றும் உள்ளூர் மக்களை மாநிலம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க உதவும்” என்று அவர் கூறினார்.