சுட்டெரிக்கும் வெயில் தாங்க முடியாமல் வெப்ப அலையில் சிக்கி நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது
தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. மத்திய, கிழக்கு மற்றும் வட இந்தியாவில் கடுமையான வெப்ப அலை வீடு வரும் நிலையில், சுட்டெரிக்கும் வெயில் தாங்க முடியாமல் வெப்ப அலையில் சிக்கி நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.
கடுமையான வெப்பத்தால் ஏற்படும் ஹீட்ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு பீகார் மாநிலத்தில் 32 பேர், ஒடிசா மாநிலத்தில் 10 பேர், ஜார்கண்ட், ராஜஸ்தானில் தலா 5 பேரும், உத்தரபிரதேத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, டெல்லியில் பீகார் மாநிலம் தர்பங்காவைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் ஹீட்ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் வெப்பநிலை 108 டிகிரி பாரன்ஹீட்டாக உயர்ந்ததால் உறுப்பு செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். 108 டிகிரி என்பது வழக்கத்தை விட 10 டிகிரி அதிகமாகும்.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் மே 31ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரையிலும், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் மே 31ஆம் தேதியும் புழுதிப் புயல் வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேசமயம், மே 31ஆம் தேதி மற்றும் ஜூன் 2ஆம் தேதிக்கு இடையே வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இடியுடன் கூடிய மிக லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் சேற்று அதிகபட்ச வெப்பநிலை 45.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது விட 5.2 டிகிரி அதிகமாகும். அதற்கு முந்தைய நாள்தான் டெல்லியில் 79 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 46.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்ச்வு மையம் தெரிவித்தது.
திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு? பிரதமர் மோடிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி!
ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் விதர்பாவின் பல பகுதிகளில் 45-48 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் நேற்று வெப்பநிலை பதிவாகியது. மேற்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கடலோர ஆந்திரப் பிரதேசம், யானம், குஜராத், தெலுங்கானா மற்றும் ராயலசீமாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 42-45 டிகிரி செல்சியஸ் வரை காணப்பட்டது. இவை வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பை விட 3-6 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மே 31 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகளில் கடுமையான வெப்ப அலை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், திரிபுரா, மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.