ஜூன் 2ஆம் தேதி சரணடைய உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்தது. இந்த வழக்கில் தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 10ஆம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. முதல்வருக்கான பணிகளை கெஜ்ரிவால் செய்ய தடை விதித்த உச்ச நீதிமன்றம், ஜூன் 2ஆம் தேதி அவர் சரணடையுமாறு உத்தரவிட்டது.
இதனிடையே, தன்னுடைய இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு கோரிய கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை விசாரணைக்கு பட்டியலிட மறுப்பு தெரிவித்துடன், விசாரணை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கும்படி கூறி கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்தது.
தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜூன் 2ஆம் தேதியன்று அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்து திகார் சிறைக்கு திரும்ப வேண்டும். இந்த நிலையில், ஜூன் 2ஆம் தேதி சரணடைய உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் இரண்டாம் தேதி சிறையில் சரண் அடையவுள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெறும் சமயங்களில் டெல்லி மக்கள் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்!
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாளை மறுநாள் (ஜூன் 2ஆம் தேதி) நான் சரணடையவுள்ளேன். இதற்காக மதியம் 3 மணியளவில் எனது வீட்டில் இருந்து நான் புறப்படுவேன். இந்த முறை அவர்கள் என்னை மேலும் சித்திரவதை செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் நான் தலைவணங்க மாட்டேன். நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், சிறையில் இருக்கும் உங்களைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் முதல்வர் கெஜ்ரிவாலும் மகிழ்ச்சியாக இருப்பார். நான் உங்கள் மத்தியில் இருக்க மாட்டேன், ஆனால் டெல்லிக்கான அனைத்து வேலைகளும் தொடர்ந்து நடைபெறும்.” என தெரிவித்துள்ளார்.
मुझे परसों सरेंडर करना है। माननीय सुप्रीम कोर्ट का बहुत-बहुत शुक्रिया। https://t.co/1uaCMKWFhV
— Arvind Kejriwal (@ArvindKejriwal)
மேலும், “அவர்கள் என்னை பல வழிகளில் உடைக்க முயன்றனர், நான் தலைவணங்க வேண்டும் என முயற்சித்தனர். என்னை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை. நான் சிறையில் இருந்தபோது, என்னைப் பலவிதங்களில் சித்திரவதை செய்தார்கள். அவர்கள் என் மருந்துகளை நிறுத்தினர். நான் 20 வருடங்களாக நீரிழிவு நோயாளி. கடந்த 10 வருடங்களாக, தினமும் இன்சுலின் ஊசி போடுகிறேன். தினமும் 4 முறை ஊசி போடுகிறேன். சிறையில் பல நாட்கள் இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தினர். என் சர்க்கரை அளவு 300ஐ எட்டியது. இவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரியவில்லை. 50 நாட்கள் சிறையில் இருந்த நான், இந்த 50 நாட்களில் 6 கிலோ எடையை குறைத்தேன். நான் சிறைக்கு சென்றபோது 70 கிலோவாக இருந்த எனது எடை இன்று 64 கிலோவாக உள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்தாலும் உடல் எடை கூடவில்லை. இவை சில தீவிர நோய்களின் அறிகுறிகளாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னும் நிறைய மருத்துவ சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது.” எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ளுமாறும் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். “என் பெற்றோர் மிகவும் வயதானவர்கள். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. சிறையில் இருக்கும் அவரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். எனக்குப் பிறகு என் பெற்றோரைக் கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்காக பிரார்த்தணை செய்யுங்கள். என் மனைவி சுனிதா மிகவும் வலிமையானவர். என் வாழ்க்கையின் ஒவ்வொரு கடினமான நேரத்திலும் அவர் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார். கடினமான நேரங்கள் வரும்போது, முழு குடும்பமும் ஒன்றுபடுகிறது. கடினமான காலங்களில் நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். நாம் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுகிறோம். நாட்டைக் காப்பாற்ற எனக்கு ஏதாவது நேர்ந்தால், நான் என் உயிரை இழந்தாலும், வருத்தப்பட வேண்டாம். உங்கள் பிரார்த்தனையால்தான் இன்று நான் உயிருடன் இருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதம் எதிர்காலத்திலும் என்னைக் காக்கும். இறுதியில், கடவுள் விரும்பினால், உங்கள் மகன் மிக விரைவில் திரும்பி வருவார் என்று நான் கூற விரும்புகிறேன்.” என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.