குருவாயூர் - மதுரை விரைவில் ரயிலில் பயணித்த பயணியை பாம்பு கடித்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது
குருவாயூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணியை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் தென்காசியை சேர்ந்த கார்த்தி என்பது தெரிய வந்துள்ளது. ரயில் ஏட்டுமானூர் வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக, கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் கார்த்தி அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், ரயிலுக்குள் பாம்பு எப்படி வந்தது என்பது குறித்து ரயில்வே தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. ரயிலில் கடித்தது பாம்புதானா அல்லது எலியா என ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே போலீசாரும் முதலில் சந்தேகப்பட்டனர். எனினும், ரயிலில் பாம்பு இருப்பதை கண்டதாக சக பயணிகள் தெரிவித்துள்ளனர். கடிபட்ட இளைஞரும் பாம்பை பார்த்ததாக கூறியுள்ளார். பாம்புக்கடிக்கான சிகிச்சை தொடங்கியுள்ளதை மருத்துவமனை நிர்வாகமும் உறுதிபடுத்தியுள்ளது. பாம்பு கடித்த இளைஞருக்கு கடுமையான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி அல்ல வழிப்பறி: முதல்வர் ஸ்டாலின் காட்டம்!
முன்னதாக, பாதிக்கப்பட்ட இளைஞர் பயணித்த ரயில் பெட்டி மட்டும் சீல் வைக்கப்பட்டு, குருவாயூர்-மதுரை விரைவி ரயில் இயக்கப்பட்டது. குருவாயூரில் ரயிலை நிறுத்தும் போது பாம்பு உள்ளே நுழைந்திருக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சம்பவம் ரயில் பயணிகளுக்கான பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.