பெங்களூருவில் பார்க்கிங் வரி விதிப்பில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Bengaluru Parking Tax: இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்கள் தொகைக்கு போட்டியாக வாகனங்களும் பெருகி வருகின்றன. இன்று பைக், ஸ்கூட்டர்கள் இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இதேபோல் பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் கார்களை வாங்க ஆரம்பித்து விட்டனர். கொரொனாவுக்கு பிறகே வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக உள்ளது.
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல்
அதிலும் இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம் எனப்படும் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பெரும் தொல்லையாக இருக்கிறது. பெங்களூருவில் என்னதான் பாலங்கள் கட்டினாலும், மெட்ரோ ரயில்கள் கொண்டு வரப்பட்டாலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை. மாலை 6 மணிக்கு வேலை முடிந்தாலும் டிராபிக் ஜாமில் மணிக்கணக்கில் சிக்கித் தவித்து இரவு 10 மணிக்கு வீட்டுக்கு செல்ல முடிகிறது.
பெங்களூரு பார்க்கிங் வரி
இந்நிலையில், பெங்களூருவில் சொத்து வரி விதிப்புடன் கூடிய பார்க்கிங் வசதிக்கான வரியில் புதிய விதிமுறையை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது. UAV எனப்படும் இந்த புதிய பார்க்கிங் வரி விதிப்பு முறையால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் சுயாதீன வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் அதிக செலவுகளை எதிர்கொண்டாலும், ஷாப்பிங் மால்கள் குறைக்கப்பட்ட கட்டணங்களால் பயனடைவார்கள்.
வெயிட்டிங் டிக்கெட்டில் ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஆப்பு! ரயில்வே கொண்டு வந்த புதிய விதிமுறை
பெரும் சுமையாக இருக்கும்
புதிய பார்க்கிங் வரி கட்டமைப்பின் கீழ், குடியிருப்புவாசிகளுக்கு ஆண்டுக்கு ரூ.600 வசூலிக்கப்படும், அதே நேரத்தில் வணிக நிறுவனங்கள் ரூ.900 செலுத்த வேண்டும். இந்த மாற்றம் ஒட்டுமொத்த வரிச்சுமையைக் குறைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வரிவிதிப்பு முறை வர்த்தக நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் குடியிருப்புவாசிகளுக்கு இது பெரும் சுமையாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கருத்து
''புதிய வரி விதிப்பு முறையால் சொத்து வரி குறையவே செய்யும். அதிகரிக்காது. இந்த வரி விதிப்பு தொடர்பாக பொதுமக்கள் 7 நாட்களுக்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்'' என்று பெங்களுரு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு மாநகராட்சியின் இந்த நடவடிக்கை பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுமா? அல்லது வீட்டு உரிமையாளர்களுக்கு நிதி நெருக்கடியை அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நள்ளிரவில் மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃப் சட்ட மசோதா.! அதிமுக, பாமக, தமாக நிலைப்பாடு என்ன.?