மேற்கு வங்க ஆசிரியர்கள் 25,000 பேரின் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது எதிர்க்கட்சிகளின் சதி என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Supreme Court upholds dismissal of 25,000 teachers in west bengal: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 2016ம் ஆண்டில் 25,000 ஆசிரியர்கள் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. பின்பு ஆசிரியர்கள் நியமனத்தில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு பலருக்கும் வேலை வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
ஆசிரியர்கள் நியமன முறைகேடு
இது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த நீதிபதிகள் முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்து ஆசிரியர்கள் நியமனத்தையும் ரத்து செய்தனர். மேலும் இது தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும் உத்தாரவிட்டனர். மேலும் ஆசிரியர்கள் நியமன முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவும் விசாரணை நடத்திய நிலையில், மேற்கு வங்கத்தின் கல்வி அமைசச்ர் பார்த்தா சட்டர்ஜி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
இதற்கிடையே கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி மேற்கு வங்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளது என்பதை உறுதி செய்து கொல்கத்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
முழு தேர்வு மோசடி
"எங்கள் கருத்துப்படி முழு தேர்வு செயல்முறையும் தீர்க்க முடியாத அளவுக்கு மோசடிகள் நிறைந்ததாகவும், கறைபடிந்ததாகவும் உள்ளது. தேர்வின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மை முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. முழு தேர்வு செயல்முறையும் முடிவுகளும் செல்லாது. ஆகவே கொல்கத்த உயர்நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை'' என்றனர்.
வக்ஃபு மசோதா: முனம்பம் மக்களின் நிலப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
அடுத்த 3 மாதத்திற்குள் புதிய தேர்வு
24,000 ஆசிரியர்கள் நியமனம் ரத்தை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அடுத்த 3 மாதத்திற்குள் புதிதாகத் தேர்வு நடத்தி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டனர். அந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இதுவரை தாங்கள் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டியதில்லை என்றும் ஆனால் ஆசிரியர்கள் தேர்வில் தோல்வி அடையபவர்கள் இதுவரை வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
மோசமான தோல்வி
உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவு மேற்கு வங்க அரசுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. மேற்கு வங்க் அரசின் மோசடியால் பட்டாதாரிகளின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளதாக பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மம்தா பானர்ஜிக்கு "மோசமான தோல்வி" என்று விவரித்தார். "கல்வி அமைச்சராகப் பணியாற்றி, ஏராளமான பணத்துடன் பிடிபட்ட மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் பார்த்தா சாட்டர்ஜி, இந்த ஊழலில் ஈடுபட்டதற்காக ஏற்கனவே சிறையில் உள்ளார். இந்த மிகப்பெரிய மோசடி மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கியதால் முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும், விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி கொதிப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த தீர்ப்பை தனிப்பட்ட முறையில் ஏற்கவில்லை என்றும், ஆனால் அரசு தேர்வு செயல்முறையை மீண்டும் செய்யும் என்றும் கூறினார். மேலும் எதிர்க்கட்சியான பாஜக மற்றும் சிபிஎம் வங்காளத்தின் கல்வி முறை வீழ்ச்சியடைய விரும்புகிறதா எனவும் இதில் ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க ஆசிரியர்கள் 25,000 பேரின் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது எதிர்க்கட்சிகளின் சதி என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தாராவி மக்களை உப்பளத்தில் குடியமர்த்துவதற்கு எதிர்ப்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு