ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் என வலுக்கும் கோரிக்கை. கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே சொன்ன முக்கிய தகவல்

By Ramya sFirst Published May 25, 2023, 7:19 PM IST
Highlights

கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்லூரிகளில் ஹிஜாப் தடையை நீக்க திரும்பப் பெறுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை "உடனடியாக" நீக்க வேண்டும் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு சமீபத்தில் கர்நாடக அரசை வலியுறுத்திது. மேலும், காங்கிரஸ் அரசு கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளித்து நிலைநிறுத்த வேண்டும்' என்று அம்னெஸ்டி அமைப்பு கூறியிருந்தது.

மேலும் தனது ட்விட்டர் பதிவில் “ கல்வி நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கான தடையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தடையானது முஸ்லிம் பெண்களின் கருத்து சுதந்திரம் மற்றும் மத உரிமைகள் மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தூண்டுகிறது, இது சமூகத்தில் அர்த்தமுள்ள பங்களிப்பைத் தடுக்கிறது." என்று தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க : குனோ தேசிய பூங்காவில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் இறப்பு! ஒரே வாரத்தில் 3வது முறை!

இதைதொடர்ந்து கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்லூரிகளில் ஹிஜாப் தடையை நீக்க திரும்பப் பெறுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் கர்நாடக அமைச்சரான பிரியங்க் கார்கே இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் "கர்நாடகாவின் இமேஜுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் அனைத்து நிர்வாக உத்தரவுகள், அரசு உத்தரவுகள் மற்றும் மசோதாக்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்," என்று தெரிவித்தார்.

இதனிடையே ஹிஜாப் தடை விவகாரம் குறித்து பேசிய கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, "இந்த விவகாரம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது விவேகமான எந்த அரசாங்கமும், முந்தைய பாஜக அரசின் ஹிஜாப் பற்றிய உத்தரவை) திரும்பப் பெறும் என்று நினைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

ஹிஜாப் சர்ச்சை என்றால் என்ன?

கடந்த ஆண்டு பிப்ரவரியில், கர்நாடகாவில் அப்போது இருந்த பாஜக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் சீருடை கட்டாயம் என்றும் ஹிஜாப் அணிவதற்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்றும் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த உத்தரவை அடிப்படை உரிமை மீறல் என்று கண்டித்தனர்.

அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதை தொடர்ந்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதி.. அவரின் உடல்நிலை எப்படி உள்ளது?

click me!