
குஜராத் மாநிலத்தில் 4-ந்தேதி நடைபெற இருக்கும் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 997 வேட்பாளர்களில் 198 பேர் கோடீஸ்வரர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த 198 வேட்பாளர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களாகவும், தனிநபர்களாகவும் இருக்கிறார்கள் என ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு மற்றும் குஜராத் தேர்தல் கண்காணிப்பு ஆகிய இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
198 கோடீஸ்வர வேட்பாளர்களில் 65 பேரின் சொத்துமதிப்பு ரூ.5 கோடிக்கு அதிகமாகவும், 60 பேருக்கும் அதிகமானவர்களின் அசையும், அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.2 கோடி முதல் ரூ. 5 கோடி வரை இருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 9 ந்தேதியிலும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 14-ந்தேதியிலும் நடக்கிறது.
இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் 997 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 198 பேர் கோடீஸ்வரர்கள் எனத் தெரியவந்துள்ளது. அந்த 198 பேரில் 76 கோடீஸ்வரர்கள் பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் 60 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் 7 கோடீஸ்வரர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 6 கோடீஸ்வரர்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 2 கோடீஸ்வர வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
இதில் எந்த கட்சியையும் சாராத சுயேட்சை வேட்பாளர்கள் 25 பேர் கோடீஸ்வரர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதில் பா.ஜனதா முதல்அமைச்சரும், பா.ஜனதா வேட்பாளருமான விஜய் ரூபானியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரானில் ராஜ்யகுரு போட்டியிடுகிறார். இவருக்கு ரூ.141.22 கோடி சொத்துக்கள் உள்ளன. இவரின் சொத்துமதிப்பே அனைவரைவிட அதிகமாகும்.
அதைத் தொடர்ந்து பாடோட் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான சவுரப் படேலுக்கு ரூ.123.78 கோடி சொத்துக்கள் உள்ளன. வத்வான் தொகுதியின் பா.ஜனதா வேட்பாளர் தன்ஜிபாய் படேலுக்கு ரூ.113.47 கோடி சொத்துக்கள் உள்ளன.
இதில் தன்ஜிபாய் படேல் மட்டுமே ஆண்டுக்கு அதிகபட்ச வருமானம் பெறும் வேட்பாளர் ஆவார், இவரும், இவரின்குடும்பத்தாரும் ஒர் ஆண்டுக்கு ஈட்டும் வருமானம் ரூ.113.47கோடியாகும். இவருக்கு சொந்தமாக பல்வேறு நிறுவனங்கள் இயங்குகின்றன.
இதில் 923 வேட்பாளர்களில் 847 வேட்பாளர்கள் தங்களுக்கு வருமானம் வரும் மூலத்தை பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால், 76 வேட்பாளர்கள் தாங்கள் விவசாயம் செய்கிறோமா அல்லது வர்த்தகம், தொழில் செய்கிறாமோ என்பது குறித்து குறிப்பிடவில்லை.
இதற்கிடையே போர்பந்தர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் பிரகாஷ் உனத்கத், ராபிக் ஹூசைன் ஆகியோர் தங்களுக்குசொந்தமாக சொத்துக்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் இருந்து காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளைச் சேர்ந்த 14-க்கும் அதிகமான வேட்பாளர்களின் சொத்துமதிப்பு குறைந்தபட்சம் ரூ. ஒரு கோடிக்கும் அதிகமானது, இவர்கள் எந்தவிதமான வருமானவரி ரிட்டன்களையும் இதுவரை தாக்கல் ெசய்து இருக்கிறார்களா என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
மொத்தம் 923 வேட்பாளர்களில் 580 வேட்பாளர்கள் 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 12 வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 76 வேட்பாளர்கள் மட்டுமே தாங்கள் படித்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். 17 வேட்பாளர்கள் தங்களுக்கு படிப்பறிவு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
923 வேட்பாளர்களில் 57 பேர் பெண் வேட்பாளர்கள். 40 சதவீத வேட்பாளர்கள் அதாவது 367 பேரின் வயது சராசரியாக 25 வயதில் இருந்து 40 வயதுகுட்பட்டவர்கள். 473 வேட்பாளர்கள் 41 வயதில் இருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள், 82 பேர் 61 வயது முதல் 80 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.