பருக்காபாத் மருத்துவமனையில் 49 பச்சிளங் குழந்தைகள் பலி..!

First Published Sep 4, 2017, 3:34 PM IST
Highlights
49 childrens are died in parukkabad hospital


உத்தரப்பிரதேசம், பருக்காபாத் மாவட்ட மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 49 பச்சிளங் குழந்தைகள் இறந்துள்ள விவரம் இப்போது வௌியாகியுள்ளது.

ஏற்கனவே கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மூளை அழற்ச்சி நோயால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த மாதம் இறந்த அதிர்ச்சி நடந்த நிலையில் பருக்காபாத்திலும் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லக்னோ நகரில் இருந்த 140கி.மீ. தொலைவில் உள்ளது பருக்காபாத் மாவட்டம். இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 49 சிசுக்கள் இறந்துள்ளன. இதில் ஐ.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த 30 குழந்தைகள் பிரசவ நேரத்தில் 19 குழந்தைகள் என ஜூலை 20 ந்தேதி முதல் ஆகஸ்ட் 21-ந்தேதிக்குள் இறந்துள்ளன.

குழந்தைகள் இறப்புக்கு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காதது, மருந்துகள் வழங்காதது, ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட தாமதமே குழந்தைகள் இறக்க முக்கியக் காரணம் என்று குழந்தைகளை பறிகொடுத்த தாய்மார்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, பருக்காபாத் மாவட்ட கலெக்டர் ரவீந்திர குமார், தலைமை மருத்துவ அதிகாரி உமாகாந்த் பாண்டே, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர்  அகிலேஷ் அகர்வாலை பணிஇடமாற்றம் செய்து நேற்று அரசு உத்தரவிட்டது. மேலும், தலைமை மருத்துவ அதிகாரி, கண்காணிப்பாளர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ பருக்காபாத் மாவட்ட மருத்தவமனையில் நிகழ்ந்த குழந்தைகள் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, உயர் மட்ட குழு ஒன்று அனுப்பிவைக்கப்படும். அனைத்து விதமான தொழில்நுட்ப விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவமனையின் டி.எம்., தலைமை மருத்துவஅதிகாரி, கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

இதற்கிடையே கலெக்டர் ஜெயேந்திர குமார் ஜயின், எஸ்.டி.எம். அஜித் சிங் ஆகியோர் கூறுகையில், “ 30 குழந்தைகள் வரை ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளன. விசாரணையில் தலைமை மருத்துவ அதிகாரி, கண்காணிப்பாளர் ஒத்துழைக்கவில்லை’’ என்றார்.

click me!