கேரளாவில் மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி.. எச்சரிக்கையாக இருக்க முதல்வர் அறிவுறுத்தல்..

By Ramya s  |  First Published Sep 13, 2023, 8:52 AM IST

கேரளாவில் மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதியானதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தி உள்ளார்.


கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக 2 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின. அவர்கள் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதற்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அம்மாநில அரசு நிபா எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதையடுத்து இறந்து போன உறவினர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த பரிசோதனையில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதனிடையே கோழிக்கோடு மாவட்டத்தில் ஏற்பட்ட  “இயற்கைக்கு மாறான மரணங்கள்” மூளையைச் சேதப்படுத்தும் நிபா வைரஸால் ஏற்பட்டவை என்பதை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதிப்படுத்தி உள்ளார்.  மேலும் பேசிய அவர் “ இறந்தவர் உட்பட அவரின் உறவினர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 5 மாதிரிகளில் 4 பேருக்கு நிபா பாதிப்பு உறுதியானது. அதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், ஒன்பது வயது சிறுவன் உட்பட 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. எப்படி பரவுகிறது? என்னென்ன அறிகுறிகள்? சிகிச்சை என்ன?

வைராலஜி இன்ஸ்டிடியூட் அதிகாரி ஒருவர் கூறுகையில், நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த மாதம் இறந்தார், மற்றவர் ஆகஸ்ட் 30 அன்று இறந்தார் என்று தெரிவித்தார். 

நிபா எப்படி பரவுகிறது?

வெளவால்கள், பன்றிகள் அல்லது பிற நபர்களின் உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பு மூலம் இந்த நிபா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. இது முதன்முதலில் 1999 ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் பன்றி வளர்ப்பவர்கள் மற்றும் பன்றிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியது. மலேசியாவின் நிபா என்ற இடத்தில் கண்டறியப்பட்டதால் இதற்கு நிபா என்ற பெயர் வந்தது. இதுவரை இந்த வைரஸுக்கு எதிராக சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் இல்லை.

இதனிடையே கேரளவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்த மத்திய சுகாதார அமைச்சர், நிலைமையை ஆய்வு செய்யவும், தொற்றுநோயை நிர்வகிப்பதில் மாநில அரசுக்கு உதவவும் மத்திய நிபுணர்கள் குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட வீடியோ செய்தியில், இரண்டு இறப்புகளையும் மாநில அரசு மிகவும் தீவிரமாகப் பார்க்கிறது என்று கூறினார். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதல்வர் அறிவுறுத்தினார், இறந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சிகிச்சையில் இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார்.

மேலும் பேசிய அவர் "கவலைப்பட ஒன்றுமில்லை. இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கவனமாக இருப்பதே நிலைமையைச் சமாளிப்பதற்கான திறவுகோல். சுகாதாரத் துறை தயாரிக்கும் செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

கேரளாவில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்காவது நிபா பரவல் இதுவாகும். 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் முதன்முதலில் நிபா பரவியபோது பாதிக்கப்பட்ட 23 பேரில் 21 பேர் இறந்தனர். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டில், நிபா வைரஸ் காரணமாக மேலும் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!