17-வது ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இந்தோனேசியா நாடு கடந்த நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்தியது.
17-வது ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இந்தோனேசியா நாடு கடந்த நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நடத்தியது.
பாலி நகரில் உள்ள நுஷா துவா எனுமிடத்தில் கடந்த நவம்பரில் ஜி20 நாடுகள் மாநாடு நடத்தப்பட்டது. 2021ம் ஆண்டு ஜி20 உச்சி மாநாட்டின் தலைவராக இருந்தஇத்தாலி, 2022ம் ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாட்டின் தலைவர் பொறுப்பை இந்தோனேசியாவிடம் 2021, டிசம்பரில் ஒப்படைத்தது.
இந்த ஜி20 மாநாட்டில் அர்ஜென்டினா, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய ஆணையம் ஆகியவை பங்கேற்றன.
இதையடுத்து தலைவர் பொறுப்பை ஏற்ற இந்தோனேசியா அரசு ஜி20 மாநாட்டை நடத்தியது.அது மட்டும்மல்லாமல் 2023ம் ஆண்டில் நடக்கும் ஏசியான் மாநாட்டுக்கும் இந்தோனேசியாதான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டை நடத்துவதற்காக இந்தோனேசியா அரசு 4.50 கோடி டாலர்களை ஒதுக்கி செலவிட்டது. பாதுகாப்பு, தலைவர்கள் தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் உலகத் தரத்தில் இந்தோனேசியா மாற்றியது. குறிப்பாக உச்சி மாநாடு நடக்கும் இடத்தில் 10 ஆயிரம் போலீஸார், 6ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
உச்சி மாநாட்டையொட்டி பாலியில் உள்ள குஸ்தி குரா ராய் சர்வதேச விமானநிலையம் நவம்பர் 15,16 தேதிகளில் பயணிகள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது. விமானங்கள் அனைத்தும் சுரபயா, லாம்போக்,மகாசார் போன்ற நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
இந்த ஜி20 மாநாட்டில் ரஷ்யா உக்ரைன் போர் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. உக்ரைன் ரஷ்யப் போரால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் சப்ளை பாதிப்பு, பொருளாதார மந்தநிலை போன்றவை ஏற்படுவதற்கு தள்ளியது.
உக்ரைன் ரஷ்ய போர் தொடரக் கூடாது என்று மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், ரஷ்ய சார்பில் அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவில்லை, அவருக்குப்பதிலாக வெளியுறவு அமைச்சர் பங்கேற்று அவரும் பாதியிலேயே திரும்பினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஜி20 கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டும் எனசில நாடுகள் வலியுறுத்தின. ஆனால், சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்து, யாரையும் நீக்க யாருக்கும் உரிமையில்லை என்றது. ஐரோப்பிய நாடுகள், அமெரி்க்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் புதின் பங்கேற்புக்கு எதிராகவே இருந்ததால், ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றுவந்தபின் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் உரசல் நிலவியது. இதையடுத்து, இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருவரும் நேரில் சந்தித்து 3மணிநேரம் ஆலோசனை நடத்தி இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்தினர்.
இந்த உச்சி மாநாட்டில், 2023ம்ஆண்டு ஜி20 மாநாட்டின் தலைவர் பொறுப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ வழங்கினார்.
2023 ஜி20 உச்சி மாநாடு
2023ம் ஆண்டில் 18-வது ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டை இந்தியா டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடத்த உள்ளது. இதற்கான லட்சினை மற்றும் கருத்துருவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற கருத்துரு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜி20 உச்சி மாநாட்டை எவ்வாறு சிறப்பாக நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டது. இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் ஏற்கெனவே பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அடுத்த ஆண்டு உச்சி மாநாட்டுக்கு இப்போதிருந்தே மத்திய அரசு தயாராகி வருகிறது