
மும்பையின் பிரதான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான கஃப் பரேட் பகுதியில் உள்ள மேக்கர் டவரில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
மும்பையின் பிரதான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான கஃப் பரேட் பகுதியில் உள்ள மேக்கர் டவர் கட்டிடத்தின் 21 வது மாடியில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலையில் காற்று பலமாக வீசியதால், தீ மளமளவென அடுத்தடுத்த மாடிகளுக்கு பரவியது.
தகவலறிந்து தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் கடுமையாக போராடி தீயை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இரண்டு வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்ததாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாகவும் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும், சேதம் குறித்த எவ்வித தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஷேகர் பஜாஜ் வசித்து வந்த தளத்தில் இருந்து தீ வெளியானதாக கூறப்படுகிறது.