
அமெரிக்க விமான நிலையத்தில் 2ம் தர குடிமகன் போல் நடத்தப்பட்டு 2 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவின் வர்த்தக தலைநகரான நியூயார்க் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா அமெரிக்கா சென்றார்.
நியூயார்க் நகர் விமான நிலையத்தில் அவருடைய பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை சரிபார்த்த குடியுரிமைத்துறை அதிகாரிகள், மறுபரிசீலனைக்காக சுமார் 2 மணிநேரம் அங்கு காத்திருக்க வைத்துள்ளனர்.
இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தின்மூலம் பகிர்ந்து, வேதனை தெரிவித்துள்ள உமர் அப்துல்லா, ‘3முறை அமெரிக்காவுக்கு வந்தபோதும் இதேபோல் ஆகிவிட்டது.
2 மணிநேரம் வீணாகி விட்டது. ஷாருக்கானைப்போல் போக்கிமோன் எதையும் நான் இங்கு பிடிக்கவில்லை. இதைவிட நான் வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன்’ என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.