
ஒடிசா மாநிலத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், 22 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி டுவிட்டர் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் இயங்கி வரும் மருத்துவ அறிவியல் மைய மருத்துமனையில் (இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்) நேற்றிரவு தீடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ மளமளவென பக்கத்து அறைகளுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்த நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அதிர்ச்சிடைந்தனர். உடனே அங்கிருந்து அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். அதற்குள் தீ வேகமாகப் பரவியது. இதனால், தீயில் சிக்கி 22 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள், விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். மேலும், தீயில் சிக்கியிருந்த நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டன.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, விபத்து குறித்து விவரங்களை தெரிந்து கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 09439991226 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கம் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், "தீ விபத்தில் பலர் பலியானது மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்காக, அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் பேசியிருக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கிட அமைச்சர் டி.பி.ராதனிடமும் பேசியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீவிபத்து குறித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பேசியுள்ளாக தெரிவித்துள்ள மோடி, 'மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்' எனவும் உறுதியளித்துள்ளார்.