
ஐதராபாதில் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தபோது, அதில் இரு பெண்கள் ஆங்கிலத்தில் வெளுத்துவாங்கியதைப்ப பார்த்து போலீசார் மிரண்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அமெரிக்க கிரீன்கார்டு வைத்து இருக்கும் ஒரு பெண்ணும், லண்டன் வங்கியில் பணியாற்றும் பெண் ஒருவரும் பிச்சை எடுப்பது தெரியவந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் வரும் 28-ந்தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத்துக்கு வருகிறார். அங்கு நடைபெறும் சர்வதேச தொழில்முனைவோர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும், பிரதமர் மோடி, 5 மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.
இதையெட்டி பிச்சைக்காரர்கள் இல்லாத நகராக ஐதராபாத் இருக்க வேண்டும் என்பதற்காக பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
பிச்சைக்காரர்கள் செர்ளபள்ளி சிறையில் உள்ள ஆனந்தா ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்ட பெண் பிச்சைக்காரர்களும், 150-க்கும் மேற்பட்ட ஆண்களும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம், லங்கார் தர்ஹா அருகில் பிச்சை எடுத்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தியபோது, இரு பெண்கள் போலீசிடம் ஆங்கிலத்தில் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அதைப் பார்த்து போலீசார் மிரண்டுவிட்டனர்.
அவர்களிடம் தனியாக விசாரணை நடத்தியதில், அமெரிக்க கிரீன்கார்டு வைத்து இருக்கும் ஒரு பெண் என்பதும், மற்றொருவர் லண்டன் வங்கியில் பணியாற்றும் பெண் என்பதும் தெரியவந்தது. இருவரும் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பதையும் கேட்டு போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதில் பர்ஜோனா (வயது50) என்ற பெண், லண்டனில் எம்.பி.ஏ. முடித்து, அங்குள்ள வங்கியில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகன் அமெரிக்காவில் மிகப்பெரிய கட்டிடக்கலை வல்லுநராக பணியாற்றி வருகிறார். லண்டனில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பும், கார்களும் இவருக்கு உள்ளன.
மற்றொரு பெண் ரபியா பசீரா(வயது44) இவர் அமெரிக்காவில் கிரீன்கார்டு(குடியுரிமை) வாங்கியவர். ஏராளமான சொத்துக்கள் அமெரிக்காவில் இருந்தபோதிலும், தனது சகோதரர் ஏமாற்றிவிட்டதால், மனவிரக்தியில் இருந்தார். முஸ்லிம் மதபோதகர் ஒருவரின் அறிவுரையின் பேரில் இரு பெண்களும் மனஅமைதிக்காக இங்கு வந்து பிச்சை எடுத்துள்ளனர்.
இது குறித்து செர்ரபள்ளி சிறை கண்காணிப்பாளர் கே.அர்ஜூன் ராவ் கூறுகையில், “ பர்ஜோனா என்ற பெண்ணுக்கு ஐதராபாத்தில் ஆனந்த்பாக் பகுதியில் அடுக்குமாடி வீடூ உள்ளது. தனது கணவரின் மரணத்துக்கு பின் மனதளவில் விரக்தி அடைந்த அந்த பெண் முஸ்லிம் மதபோதகர் அறிவுரையின் அடிப்படையில் இந்த தர்ஹாவில் மனஅமைதிக்காக பிச்சை எடுத்துள்ளார். இந்த தர்ஹா மனநிலம் பாதிக்கப்பட்டவர்களை குணமடையச் செய்யும் சக்தி உடையது என்பதால், இங்கு வந்துள்ளனர்.
இதையடுத்து, பர்ஜோனாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வரச்சொல்லி அவரை ஒப்படைத்தோம். மற்றொரு பெண் ரபியா பசிரா தனது சகோதரர் ஏமாற்றிவிட்டதாகக்கூறி இங்கு பிச்சை எடுத்தார். அவர் தற்போது காப்பகத்தில் உள்ளார்.இவர் அமெரிக்கா கீரீன்கார்டு உரிமைபெற்றவர். அமெரிக்காவில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன என்பது விசாரணையில் தெரியவந்தது” என்று தெரிவித்தார்.