மத்திய கிழக்குப் பகுதியில் ஓர்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த கப்பலை ஈரான் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது. அந்க் கப்பலில் 17 இந்தியர்கள் உள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் வெடித்ததை அடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 6 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்லாமிய நாடுகள் குரல் கொடுத்துள்ளன.
ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் ஆதரவு பெற்ற சிரியா, லெபனான் போன்ற நாடுகளில் உள்ள அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான், சிரியாவில் உள்ள ஈரான் நாட்டுத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் ஈரான் படையைச் சேர்ந்த இரண்டு முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது இஸ்ரேல்தான் என ஈரான் குற்றம் சாட்டுகிறது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் சூழல் நிலவுகிறது. ஓர்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த கப்பலை ஈரான் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது. அந்க் கப்பலில் 17 இந்தியர்கள் உள்ளனர் என்றும் அவர்களைப் பத்திரமாக மீட்க ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
17 இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் விரைவாக விடுதலையை உறுதி செய்வதற்காக தூதரகம் வாயிலாக ஈரானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் போக்கு காரணமாக இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.