
15 அரசு வங்கிகள் மூடப்பட்டு, 5 பெரிய அரசு வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளன, இதனால் டெபாசிட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சமூக ஊடகங்களில் வரும் செய்திக்கு ரிசர்வ் வங்கி, மத்திய அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள, 15 பொதுத்துறை வங்கிகள், விரைவில் ஐந்து பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இந்த 15 வங்கிகளில் ஏதேனும் கணக்குகள், டெபாசிட்கள் வைத்து இருந்தால், உடனடியாக எடுக்கவும் என்று உலாவரும் செய்தியால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
வங்கிகள் பின்வருமாறு இணைக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அலகாபாத் வங்கி, கார்பரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, ஓரியன்டல் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியோடு இணைக்கப்பட உள்ளது.
1. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யு.சி.ஓ. வங்கி, சின்டிகேட் வங்கி ஆகியவை கனரா வங்கியோடு இணைக்கப்பட உள்ளது.
2. மகிளா வங்கி, பஞ்சாப் அன்ட் சிந்து வங்கி, யுனெடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை பேங்க் ஆப்பரோடாவுடன் இணைக்கப்படலாம்.
3. ஆந்திரா வங்கி, மஹாராஷ்டிரா வங்கி, விஜயா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் சேர்க்கப்பட உள்ளது.
4. தீனா வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகியவை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி விளக்கம்.....
சமூக ஊடகங்களிலும், சில ஊடகங்களிலும் வரும் இந்த செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை மூடி, அதை 5 பெரிய வங்கிகளுடன் இணைக்கப்போவதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறாக தகவல் பரப்பப்பட்டு வருகின்றன. வாராக்கடனில் சிக்கியுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை மீட்கும் நடவடிக்கையாக சீர்த்திருத்த நடவடிக்கைள்(பி.சி.ஏ.) எடுக்கப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட அந்த வங்கிகளை கண்காணித்தல், செயல்பாடுத்துதல், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல் போன்றவை அடங்கும். இந்த நடவடிக்ைகயால் வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இந்த நடவடிக்கை தவறாக முறையில் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மறுப்பு
மத்திய நிதிச் சேவை செயலாளர் ராஜீவ் குமார் டுவிட்டரில் கூறுகையில், “ எந்த அரசு வங்கியையும் மூடும் எண்ணம் இல்லை. ரூ.2.11 லட்சம் கோடி முதலீட்டில் பொதுத்துறை வங்கியை வலிமைப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள். வங்கிச் சீர்திருத்த நடவடிக்கைகள், முதலீடு அளித்தலுக்கான செயல்திட்டம் சரியான திசையில் செல்கிறது’’ என்றார்.