India@75 : பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஆயுதத்தை எடுத்த 6 பெண்கள்.!

By Raghupati R  |  First Published Jul 18, 2022, 10:01 PM IST

ஆங்கிலேயப் பேரரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய வங்காளப் புரட்சியாளர்களில் துணிச்சலான பெண்கள் குழுவும் இருந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?


அவர்கள் மொத்தம் 6 பேர். அவர்கள் பிரிதிலதா வத்தேதார், கல்பனா தத்தா, பினா தாஸ், கல்யாணி தாஸ், கமலா தாஸ்குப்தா மற்றும் சுஹாசினி கங்குலி. இவர்கள் எல்லாரும் கல்லூரி தோழர்கள். இந்த குழு 1930, ஏப்ரல் 18 அன்று நடந்த பழம்பெரும் சிட்டகாங் ஆயுதக் தாக்குதலில் பங்கேற்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவின் முதல் மகளிர் கல்லூரியான கொல்கத்தாவின் புகழ்பெற்ற பெத்துன் கல்லூரியில் படித்தவர்கள். 

அவர்கள் அனைவரும் வங்கப் பிரிவினைக்கு எதிராக எழுந்த வங்காளப் புரட்சி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டனர்.  இவர்கள் ஜுகாந்தர் மற்றும் பகத் சிங்கின் இந்திய குடியரசு கட்சி போன்ற புரட்சிகர கட்சிகளில் சேர்ந்தனர். பெத்தூன் கல்லூரியில் சத்ரி சங்கா என்ற புரட்சிகர பெண்கள் அமைப்பை உருவாக்கி, ஆயுதம் மற்றும் கொரில்லா போரில் பயிற்சி பெற்றார்கள். 

Tap to resize

Latest Videos

undefined

ஏப்ரல் 18 அன்று இரவு 10 மணியளவில், தற்போதைய பங்களாதேஷில் உள்ள சிட்டகாங்கில் உள்ள பல்வேறு பிரிட்டிஷ் ஆயுதக் களஞ்சியங்கள் சூர்யா சென், கணேஷ் கோஷ் மற்றும் லோகநாத் பால் தலைமையிலான புரட்சியாளர்களால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜலாலாபாத் மலைகளில் புரட்சியாளர்களும் பிரிட்டிஷ் இராணுவமும் மோதிக்கொண்டனர். கடுமையான போரில் 12 புரட்சியாளர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.

ஜலாலாபாத்தில் நடைபெற்ற புரட்சியாளர்களின் மரணத்திற்குப் பழிவாங்கத் துணிச்சலான இளம் பெண் ஒரு கூட்டம் தீர்மானித்தது. செப்டம்பர் 24, 1932ல் பஹர்தலியில் உள்ள ஐரோப்பிய கிளப் 21 வயதான பிரிதிலதா வதேதார் தலைமையிலான புரட்சியாளர்களால் தாக்கப்பட்டது.  ‘இந்தியர்கள் மற்றும் நாய்கள் அனுமதிக்கப்படவில்லை’ என்று அதன் பலகையால் கிளப் பிரபலமடைந்தது மட்டுமில்லாமல் சர்ச்சையை கிளப்பியது. 

ஆணின் ஆடை அணிந்து துப்பாக்கி ஏந்திய பிரத்திலதா பலரை கொன்று குவித்தார். ஆனால் இறுதியில் அவரது காலில் சுடப்பட்டார். அவரால் நகர முடியவில்லை. ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட வேண்டியிருந்தபோது, ​​​​பிரிதிலதா ஒரு சயனைடு மாத்திரையை விழுங்கி இறந்துவிட்டார். கல்பனா தத்தா, பெத்தூன் கல்லூரியிலும், சத்ரி சங்கத்திலும் பிரிதிலதாவின் தோழியாக இருந்தார். பஹர்தலா தாக்குதலுக்கான திட்டங்களில் ஐவரும் பங்கேற்றார். கல்பனா ஒரு வாரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார். 

சூர்யா கைது செய்யப்பட்டபோது, ​​கல்பனா சிறிது நேரத்தில் தப்பித்து பின்னர் மீண்டும் பிடிபட்டார். பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சிபிஐயின் பொதுச் செயலாளர் பி.சி ஜோஷியை மணந்தார். சிட்டகாங் தாக்குதலில் சுஹாசினி கங்குலியும் சத்ரி சங்கம் மற்றும் ஜுகாந்தர் உறுப்பினராக இருந்தார். பல வருடங்கள் சிறைவாசத்திற்கு பிறகு, இவரும் சிபிஐ கட்சியில் இணைந்தார்.

பினா தாஸ் மற்றும் கல்யாணி தாஸ் ஆகிய இருவரும் சகோதரிகள். இவர்கள் சுபாஷ் சந்திரபோஸின் ஆசிரியரின் மகள்கள். 1932 ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவின் போது வங்காள கவர்னர் ஸ்டான்லி ஜாக்சனை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பினா தாஸ் வரலாறு படைத்தார். அப்போது ஜாக்சன் காயமின்றி தப்பினார். 

ஆனால், பினா கைது செய்யப்பட்டார். அவர் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது, ​​கடுமையான போலீஸ் சித்திரவதைகளை அனுபவித்தார். பின்னர் பினா மற்றும் கல்யாணி இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கமலா தாஸ்குப்தா மற்றொரு பெண் புரட்சியாளர் ஆவார், அவர் ஜாக்சன் மீது பீனா சுட்ட ரிவால்வரை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!