India@75 Indian Designs : ஆங்கிலேயர் விட்டுச்சென்ற அரிய பொக்கிஷம்.! பாம்பன் பாலமும், அதன் வரலாறும்.!!

By Raghupati R  |  First Published May 16, 2022, 4:23 PM IST

தமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது.


ராமேஸ்வரம் என்றால் உடன் நினைவுக்கு வருவது பாம்பன் பாலம் தான். பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற அரிய பொக்கிஷம் ஆகும். இந்த பாலத்திற்காக 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு, இரண்டாயிரத்து 340 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் பாம்பன் தீவையும் இணைக்கிறது. இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் பாம்பன் தீவில்தான் அமைந்துள்ளது. 

இந்தியா முழுவதிலும் இருந்து ராமேசுவரம் வரும் பக்தர்கள் கடல் பாலத்தை கடந்து தான் ராமேஸ்வரத்தை அடைய முடியும். 1876ல் ஆங்கிலேயர்கள் இந்தியா இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 ல் டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ல் ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. தமிழகத்தின் பெரும் பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். 

Latest Videos

இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தை இருவழிப் பாலம் என்று கூட அழைக்கலாம். ரயில்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டால் கப்பல் போக்குவரத்து தடைபடும் என கருத்தில் கொண்டு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும் தடைபடாதவாறு கட்டப்பட்ட பாலம் தான் பாம்பன் பாலம். இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.  

இந்த பாலத்தை அமைக்கும் பணிகளை செய்தவர் ஆங்கிலேய பொறியாளர் ஷெர்சர்.  பாம்பன் தூக்குப் பாலத்தை கடக்க கப்பல்கள் வரும் போது மனித சக்தியால் தான் பாலம் மேல் நோக்கி தூக்கப்பட்டு திறக்கப்படுகிறது. தூக்குப்பாலத்தை திறக்கவும், மூடுவதற்கும் இரு புறத்திலும் ஒரு பகுதிக்கு 8 ரயில்வே ஊழியர்கள் வீதம் 16 பேர் நின்று பற்சக்கரங்களை சுற்றுவார்கள். அப்போது தூக்குப்பாலம் சிறிது சிறிதாக மேலே உயரும். கப்பல் சென்ற பிறகும் இதே நடைமுறைப்படி பாலம் மீண்டும் ரயில் செல்லும் வகையில் பழைய நிலைக்கு கொண்டு வரப்படும். 

1974 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த தரைப் பாலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு 1988ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி திறந்து வைத்தார். பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ள இடம், உலகிலேயே இரண்டாவது அதிக துருப்பிடிக்கும் இடமாகும், இருப்பினும் இந்தப் பாலம் இன்று வரை கம்பீரமாய் வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது. நீரணையின் இரண்டு கி.மீ தொலைவுக்குப் பரந்திருக்கும் இப்பாலம் இந்தியப் பெருநிலப்பரப்பையும், ராமேஸ்வரத்தையும் இணைக்கும் ஒரேயொரு தரைவழிப் பாலமாகும். இந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். 

1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதன் முதலாக பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் சென்னையில் இருந்து ஒரே பயணச் சீட்டில் இலங்கைக்கு செல்ல முடியும். அதாவது சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயிலில் சென்று, அங்கிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் பகுதிக்கு படகுகள் மூலம் கூட்டிச் செல்வார்கள். அப்போது இலங்கையும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால் இந்த போக்குவரத்து நடைமுறையில் இருந்தது. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் புயலால் தனுஷ்கோடி நகரமே முற்றிலுமாக அழிந்த நிலையில் பாம்பன் ரயில் பாலத்திற்கு பெரிதாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. 

ஆனாலும் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்க சிறிது காலம் பிடித்தது. 1974 ஆம் ஆண்டில் பாம்பன் தீவுக்கு வாகனங்கள் செல்ல தரைப் பாலம் கட்டத் தொடங்கப்பட்டது. 14 ஆண்டுகளுக்கு பிறகு 1988ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக தரைப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. பாம்பன் ரயில் பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் மீட்டர்கேஜ் பாதையாகவே இருந்து வந்தது. பின்னர் 2006ல் மானாமதுரை - பாம்பன் ரயில் பாதையை 24 கோடி ரூபாய் செலவில் அகலப்பாதை அமைக்கப்பட்டு  2007 ஆகஸ்டு மாதம் முதல் அகலப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது. 

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்துக்கு.  2014ம் ஆண்டு ஜனவரி 28 ம் தேதி  நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமேஸ்வரத்துக்கு செல்வதற்கான தரைப் பாலம் வழியாக வாகனங்களில் வருபவர்கள், வாகனங்களை நிறுத்தி பாம்பன் தூக்குப்பாலத்தை ரசிக்காமல் செல்வதில்லை. பழந்தமிழரின் வரலாற்றை பதிவு செய்யும் விதமாக கடலுக்கு நடுவில் கம்பீரமாக காட்சி அளிக்கும் பாம்பன் ரயில் பாலத்தை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதுடன் அதனை பாதுகாப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.

click me!