
வைட்டமின் குறைவால் ஏற்படும் நோய்கள் மற்றும் எந்த வைட்டமின்கள் எந்த உணவில் உள்ளன என்பது பற்றி தகவல் இதோ…
வைட்டமின் ஏ கண்பார்வை தரும்
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது. கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். இந்த உயிர்சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
வைட்டமின் பி இதய பாதிப்பை நீக்கும்
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. வைட்டமின் `பி' குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.
வைட்டமின் சி மன அமைதி தரும்
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம்.
வைட்டமின் `சி' குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
வைட்டமின் டி எலும்புகளுக்கு பலம் தரும்
வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதிவிடும். வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கொட்டிவிடும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.
வைட்டமின் ஈ மலட்டு தன்மையை நீக்கும்
கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும். வைட்டமின் `ஈ' குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையையும் உண்டாக்கும்.