
இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன்களில் மூழ்கி கிடைக்கின்றனர். அதுவும் கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். கழிவறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு மூலநோய் (piles) உருவாக 46% அதிக வாய்ப்பு உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. அமெரிக்காவில் நடந்த ஒரு புதிய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
கழிவறையில் போன் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து
ஒரு சாதாரண கழிவறை இருக்கை ஒரு நாற்காலி அல்லது சோஃபாவைப்போல் இல்லாமல்—இடுப்புத் தளத்திற்கு ஆதரவை வழங்குவதில்லை. இடுப்புத் தளம் என்பது சிறுநீர்ப்பை, குடல் மற்றும் கருப்பையை ஆதரிக்கும் தசைகள் மற்றும் தசைநார்கள் கொண்ட ஒரு குழுவாகும். கழிவறை இருக்கையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இடுப்புத் தளத்திற்குள் அழுத்தத்தை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது, இதனால் ஆசனவாயின் இரத்த நாளங்களில் இரத்தம் தேங்குகிறது. இது மூலநோய் உருவாக அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்கள் யார்?
இந்த புதிய அமெரிக்க ஆய்வில், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 125 பெரியவர்கள் பங்கேற்றனர். அவர்கள் குடல் பரிசோதனை (colonoscopy) செய்துகொண்டிருந்தவர்கள். ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் கழிப்பறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பழக்கம் குறித்து ஆய்வு செய்தனர். இதில், அவர்கள் எவ்வளவு நேரம் மற்றும் எவ்வளவு அடிக்கடி தங்கள் ஃபோன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் மலம் கழிக்கும்போது சிரமப்படுவது, நார்ச்சத்து உட்கொள்வது மற்றும் அவர்களின் உடல் செயல்பாடு போன்ற பிற பழக்கவழக்கங்கள் பற்றியும் தெரிவித்தனர்.
மூலநோய் வர 46% அதிக வாய்ப்பு
கழிவறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு, பயன்படுத்தாதவர்களை ஒப்பிடுகையில், மூலநோய் வர 46% அதிக ஆபத்து இருந்தது. இந்த முடிவுக்கு வர, ஆராய்ச்சியாளர்கள் பாலினம், வயது, பிஎம்ஐ, உடற்பயிற்சி, மலம் கழிக்கும்போது சிரமப்படுதல் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளல் போன்ற பிற ஆபத்து காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டனர். ஆனாலும் இந்த தொடர்பை ஆராய்ந்த முதல் ஆய்வு இது அல்ல.
ஏற்கெனவே நடந்த ஆய்வுகளும் உறுதி
2020ஆம் ஆண்டில் ஒரு துருக்கிய ஆய்வும், ஐந்து நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் செலவழிப்பது மூலநோயுடன் தொடர்புடையது என்று கண்டறிந்தது. இத்தாலியில் நடந்த மற்றொரு 2020ஆம் ஆண்டு ஆய்வில், மூலநோய் உள்ளவர்கள் கழிப்பறையில் அதிக நேரம் செலவிடும்போது, அவர்களின் நிலை மேலும் மோசமடைகிறது என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.