போன் பயன்பாட்டை குறைக்க முடியாமல் தவித்து வருகிறீர்களா? அப்போ இதப்படிங்க முதல்ல..!!

By Dinesh TG  |  First Published Oct 15, 2022, 11:42 AM IST

நீண்ட நேரம் போனில் இருப்பதால் கண்களைத் தவிர, உடலின் நடுப்பகுதி, கழுத்து, தோள்பட்டை, கை, விரல்கள் எனப் பல பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு உடலில் இருக்கும் எதிர்ப்புச் சக்தியை பொறுத்து பாதிப்பு மோசமாகவும் இருக்கக்கூடும். தொடர்ந்து போன் பார்ப்பதால் ஒருசிலருக்கு வயிறு கோளாறுகளும் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
 


பெரும்பாலானோர் மணிக்கணக்கில் போனையே பார்த்துக் கொண்டிருப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். இந்த பிரச்னை எல்லா வயதினரிடையே காணப்படுகிறது. இந்த வரிசையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வேலையின் ஒரு பகுதியாக நாள் முழுவதும் கணினி, செல்போன் மற்றும் மடிக்கணியைப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கண்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. கண்களைத் தவிர, உடலின் நடுப்பகுதி, கழுத்து, தோள்பட்டை, கை, விரல்கள் எனப் பல பாகங்கள் ஆகியவை நீண்ட நேரம் போன் பார்ப்பதால் மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் பலரும் அதற்கு அடிமையாகிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. தொடர்ந்து மொபைல் போன் பார்ப்பதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. இந்த பிரச்னை உங்களுக்கும் இருந்தால், தொடர்ந்து இதை படியுங்கள். உரிய வழிமுறைகள் மூலம், விரைவாகவே இந்த பழக்கத்தில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

போனிலேயே நேரம் அமைக்கலாம்

Tap to resize

Latest Videos

நீங்கள் போனை எப்போது பார்க்க வேண்டும், எந்த நேரமெல்லாம் பார்க்கக்கூடாது என்கிற வழிமுறைகளை போனிலேயே நீங்கள் செட் செய்யலாம். உதாரணமாக, அதிகமாகப் பயன்படுத்தப்படும் பயன்பாடுகளுக்கான கால வரம்பை போன் வழியாக நீங்கள் வகுக்கலாம். அந்த நேரத்தை கடந்துவிட்டால், போனை தள்ளிவைக்க வேண்டும் என்பதை நிலைநிறுத்திடுங்கள். இந்த வழியாக நேரத்தை படிப்படியாக குறைக்க முடியும்.

படுக்கையறைக்கு போன் வேண்டாம்

தூங்க வேண்டும் என்பதால் தான், அந்த அறைக்கு படுக்கை அறை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை நீங்கள் தூங்கச் சென்றுவிட்டால், போனை முடிந்தவரை படுக்கை அறைக்கு எடுத்துச் செல்லாமல் இருங்கள். ஏதாவது முக்கியமான போன் வரவேண்டியது என்று இருந்தால் மட்டும், போனை படுக்கையறைக்குள் எடுத்துச் செல்ல வேண்டும். அதை தவிர அலாரம் வைப்பதற்கு தனியாக கடிகாரம் மற்றும் நேரம் பார்க்க சுவர் கடிகாரம் போன்வற்றை படுக்கை அறைக்குள் கொண்டு வையுங்கள். இதன்காரணமாக போன் பயன்பாடு படிப்படியாக குறைய துவங்கும்.

தேவையின்றி பயன்படுத்தக் கூடாது

ஏதேனும் அவசியத் தேவையில்லாமல் போன் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பது நல்ல பலனை தரும். வார இறுதி நாட்களில் போன் பயன்படுத்த மாட்டேன், ஞாயிறன்று அனைவரும் வீட்டில் இருக்கும் போது போனை எடுக்க மாடேன் என்கிற வரையறுகளை உங்களுக்கு நீங்களே அமைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் போனை சைலண்டு மோடில் போட்டு வைப்பது முயற்சியை தடையின்றி மேற்கொள்ள பெரிதும் உதவும். அலைபேசியை தேடி அலையும் பழக்கத்திலிருந்து உங்களை விடுபட வைக்கும். ஃபோன் அருகில் இல்லையென்றால் டென்ஷாகிவிடும் என்கிற எண்ணத்தை இது குறைக்கும்.

சாப்பிடும் போது கூடாது

பலருக்கும் டிவியை பார்த்துக் கொண்டு அல்லது போனை பார்த்துக் கொண்டு சாப்பிடும் பழக்கம் உள்ளது. அதை குறைப்பது மிகவும் முக்கியம். இத்தனை ஆர்பாட்டமும் உழைப்பும் ஒரு வாய் சாப்பிடுவதற்கு தான். அதனால் அதற்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அதன்காரணமாக சாப்பிடும் போது போனை தொடவே கூடாது. சில நாட்கள் கஷ்டமாகத்தான் இருக்கும். அப்படியே உங்கள் பள்ளி நாட்களையும், சிறு பிள்ளையாக இருந்தபோது வீட்டில் சாப்பிட நாட்களையும் நினைத்துப் பாருங்கள். அப்போது நம்மில் பலரிடம் போன் இருந்திருக்காது. ஆனால் அப்போது மகிழ்ச்சியுடன் உணவு சாப்பிட்டிருப்போம். அதை நினைத்துக் கொண்டே சாப்பிடுங்கள். இப்படியே உங்களை ஒவ்வொரு செயல்பாடுகளிலும் போனை பயன்படுத்துவதை குறைத்துக் கொண்டு வாங்கள்.

ஒதுக்கிவைத்திடுங்கள்

உங்களுக்குத் தேவையில்லாதபோது உங்கள் ஃபோனை ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற விஷயங்களில் சுறுசுறுப்பாக இருங்கள். பூந்தோட்டம், பாட்டு, புத்தக வாசிப்பு, நடைபயிற்சி போன்றவை உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும். போன் இல்லாத போது உங்களுக்கும் உங்களுடைய மனதுக்கு கிடைக்கும் அமைதியை ரசித்திடுங்கள். இது உங்களை மெல்லமெல்ல போனை அடிக்கடி பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும். 

click me!