சின்ன வெங்காயம் ஆரோக்கியத்தின் களஞ்சியம் என்று சொல்லலாம். மூளை செயல்திறனை மேம்படுத்துவது முதல் இருதய நலன், எலும்புக்கு வலு சேர்ப்பது வரை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
ஒட்டுமொத்த இந்தியாவையும் விட, தென்னிந்திய சமையல்களில் சின்ன வெங்காயத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. சின்ன வெங்காயம் இல்லாமல் குழம்பு, சாம்பார், சட்னி, கூட்டு என எதுவுமே கிடையாது. இதிலிருக்கும் நன்மைகளை கணக்கில் கொண்டு தான், பல்வேறு சமையல் தேவைகளுக்கு சின்ன வெங்காயம் பாரம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்காரணமாகவே இது ஆரோக்கியத்தின் களஞ்சியம் என மருத்துவ ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.
ஊட்டச்சத்துக்கள்
ஒரு 100 கிராம் கொண்ட சின்ன வெங்காயத்தில், குறைந்தளவிலான கலோரிகள், நார்ச்சத்துக்கள், புரதம், இரும்புச்சத்து, கால்ஷியம், ஃபோலேட், துத்தநாகம், பொட்டாச்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதுதவிர வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசமாக ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
ஆண்டி ஆக்சிடண்டுகள்
இருதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களை வராமல் தடுக்க உதவும் குவர்செடின் என்கிற ஆண்டி ஆக்சிடண்டுகள் சின்ன வெங்காயத்தில் அதிகளவு காணப்படுகிறது. மேலும் இது அழற்சி எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இதன்மூலம் காய்கறிகளில் இரண்டாவது பெரியளவு ஆண்டிஆக்சிடண்ட் கொண்டதாக சின்ன வெங்காயம் அறியப்படுகிறது.
ஒவ்வாமையை நீக்கும்
உடலில் அழற்சி ஏற்படும் போது ஹிஸ்டமைன் என்கிற வேதிப்பொருள் வெளியாகிறது. இது வெளியானால் உடலில் ஆங்காங்கே வீக்கங்கள் தோன்றுவது, அரிப்பு வருவது, கண்களில் அடிக்கடி நீர் நிரம்பி வழிவது போன்ற அறிகுறிகள் தோன்றும். இதன்மூலம் குறிப்பிட்ட நபருக்கு சுவாசப் பாதையில் பிரச்னை இருப்பதாக மருத்துவ ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த அழற்சி எதிர்ப்புப் பண்புக்கு சின்னவெங்காயம் சிறந்த தீர்வை வழங்குகிறது.
உங்களுக்காக சமைக்கும் போது கிடைக்கும் நன்மைகள்..!!
இருதய நலனை மேம்படுத்தும்
சின்ன வெங்காயத்திலுள்ள ஆண்டி ஆக்சிடண்டுகள் இருதயத்துக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உடலில் ஆபத்தான கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது. சின்ன வெங்காயத்தில் காணப்படும் அல்லிசின் நைட்ரிக் ஆக்சைடு ரத்த அழுத்தத்தை குறைத்து, இருதய நோய் அபாயம் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் தயிருடன் வெங்காயத்தை கலந்து செய்யப்படும் ரைத்தா என்கிற பதார்த்தம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.
சின்ன வெங்காயம் காம்பினேஷன்கள்
தயிரில் பெரிய வெங்காயத்துக்கு பதிலாக சின்ன வெங்காயத்தை சேர்த்து சாப்பிடுவது ருசியையும் ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் 2 சின்ன வெங்காயங்களை சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் பாதிப்பு பெருமளவு குறைந்துபோய்விடும். குழம்பு, சாம்பார் தவிர கூட்டு, பொரியல், தாளிச்சச் சோறு போன்றவற்றிலும் சின்ன வெங்காயத்தை சேர்ப்பது கொலஸ்ட்ராலை பெரியளவில் கட்டுப்படுத்த உதவுகிறது.