நீங்கள் சற்றும் எதிர்பாராத அளவுக்கு மருத்துவ பயன்கள் மிளகாயில் இருக்கு...

First Published Apr 10, 2018, 12:50 PM IST
Highlights
The benefits you have in the chilli are unexpected ...


காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. 

இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. மிளகாயின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

பச்சை மிளகாய், செத்தல் மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. செத்தல் மிளகாயில் கலோரியும், விட்டமின் A சத்தும் மற்றதைவிட சற்றே அதிகம்.

கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை. எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்

நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும் கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற விட்டமின் A சத்தானது அதிகம். அதனால், விழித்திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது.

Capsaicin என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும். விட்டமின் C சத்தும் அதிகம். அதனால் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக (antioxidant) செயல்படுகிறது.

நரம்புப் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

மிளகாயில் உள்ள Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது. அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்ணணி இதுதான்.

மிளகாய் எடுத்துக் கொள்வதால், என்டார்ஃபின் எனப்படுகிற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. அதனால் ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கிறது. இரவு காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும்.

இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். 

சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்சனை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, மூலநோய் போன்றவை வரலாம். மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம், ஊறுகாய் போன்றவற்றை நம் முன்னோர் சேர்த்துப் பாவித்தார்கள்.

வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்சனை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம்.

ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் என்பதால், அவர்கள் பச்சை மிளகாயை உண்ண வேண்டும். பச்சை மிளகாய் உண்ணுவதால் புரோஸ்டேட் புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறைகிறது. புகை பிடிப்பவர்கள் இதனை கவனிக்க வேண்டும். காரணம் அவர்கள் தானே தினமும் தங்களின் நுரையீரலை புகைத்து கொண்டிருக்கின்றனர்.

மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும். உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும்.

click me!