உடலுக்கு அதிக சத்துக்களை சேர்ப்பதற்கும், இடுப்பிற்கு பலம் சேர்ப்பதற்கும் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று என்றால் அது உளுந்தங்களி தான்.
நம் உடலுக்கு பலம் சேர்க்க, சில வகையான உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதில் முக்கியமான ஒன்று தான் உளுந்தங்களி. உளுந்து களி அல்லது உளுந்தங்களி, உடலுக்கு அதிக சத்துக்களை சேர்ப்பதற்கும், இடுப்பிற்கு பலம் சேர்ப்பதற்கும் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று என்றால் அது உளுந்தங்களி தான்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த கருப்பு உளுந்தால் செய்யப்பட்ட உணவு வகைகளை அவ்வப்போது கொடுப்பார்கள். அப்படி கொடுத்தால் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுப்பெறும்; மாதவிடாய் பிரச்சனைகள் இருக்காது; கருப்பை செயல்பாடு மிகவும் சீராக இருக்கும். அதனால் காரணமாகத் தான் பெண் குழந்தைகள் பூப்படைந்ததும், நல்லெண்ணெய் உடன் கருப்பு உளுந்தை சேர்த்து கொடுப்பார்கள். தினந்தோறும் உளுந்து வடை இல்லாமல் ஆகாரம் கூட கொடுக்க மாட்டார்கள்.
உளுந்தங்களி
உளுந்தங்களியில் இரும்புச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. மேலும், உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்கள் இந்த உளுத்தங்களியை சாப்பிட்டால், உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். இதனை காலை அல்லது மாலை வேளையில் சாப்பிடலாம். இப்போது உளுந்தங்களியை எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுத்தம் பருப்பு - 3/4 கப்
பச்சரிசி - 1 கப்
கருப்பட்டி - 1 1/2 கப்
நல்லெண்ணெய் - 1/4 கப்
தண்ணீர் - 3 கப்
செய்முறை
முதலில் மிக்சி ஜாரில் பச்சரிசி மற்றும் கருப்பு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை தட்டிப் போட்டு அதில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து கருப்பட்டியை கரைக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கி, ஒரு வாணலியில் ஊற்ற வேண்டும்.
பிறகு, இந்த வாணலியை அடுப்பில் வைத்து, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். வெல்லப்பாகு கொதிக்கத் தொடங்கியதும், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மாவை இதில் மெதுவாகத் தூவி, கட்டிகள் சேராதவாறு நன்றாக கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது, களி கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கிளற வேண்டும். களி கெட்டியான பதத்திற்கு வந்ததும், அதில் எண்ணெயை ஊற்றி கிளறி இறக்கி வைத்து, குளிர வைக்க வேண்டும்.
களி ஆறியதும் எண்ணெய் பயன்படுத்தி, சிறு சிறு உருண்டைகளாக உருட்டினால், மிகவும் ஆரோக்கியம் நிறைந்த சத்தான உளுந்தங்களி தயாராகி விடும்.