
** உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல உணவுகளை உண்ண வேண்டும்.
** மிதமாக உண்ண வேண்டும். மெதுவாக உண்ண வேண்டும்.
** நன்றாகச் சவைத்து, சுவைத்து உண்ண வேண்டும். எச்சில் நீர் உணவில் கலப்பதற்கு ஏதுவாக வாயை மூடி சவைக்க வேண்டும்.
** எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனம் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
** உணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.
** இயற்கை உணவே இனிய உணவு.
** பெப்சி, கொக்கோ கோலா, செவன் அப் போன்ற செயற்கை பானங்கள், அதிவேகமாகத் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் ஆகியவற்றைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவையெல்லாம் நம் உடலின் எதிரிகள். குறிப்பாக, இனிப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
** சாப்பிட்ட பின் உடனே படுக்கக் கூடாது.
** சாப்பிட்ட பின் குறைந்தது அரை மணி நேரம் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும். இது உண்ட உணவு செரிமானமாவதற்கு மிகவும் உதவும்.
** சாப்பிட்டவுடனே தண்ணீர் குடித்தால் நம் வயிற்றில் உணவைச் செரிப்பதற்காக சுரந்திருக்கும் அமிலத்தை அது நீர்த்துப் போகச் செய்து விடும். அதாவது டைல்யூட் ஆக்கி விடும். இதனால் உணவு சரிவர செரிமானமாகாது.
** சாப்பிட்ட பின் உடனே படுத்தால் வயிற்றிலுள்ள உணவைச் செரிக்க சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் வழியாக மேலே வரும். உணவுக் குழாயின் சுவர்கள் அந்த அமிலத்தால் அரிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
** நம் வாயையும், பற்களையும் சுத்தமாகப் பேணினாலே பல நோய்கள் நம்மை அண்டாது. வாயை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். காலையில் ஒரு தடவை, இரவில் ஒரு தடவை.
** தவறாமல் உணவுக்குப் பின் வாயை அலசி படுக்கைக்குச் செல்லும் முன் பல் துலக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும்.
** மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பிரஷ்ஷைக் கண்டிப்பாக மாற்ற வேண்டும். தேய்ந்து திப்புலியாகப் போகும் அளவுக்கு பிரஷ்ஷை பயன்படுத்தக்கூடாது.
** கண்ட கண்ட செயற்கைக் குளிர்பானங்களுக்குப் பதிலாக அதிக அளவு தண்ணீர் அருந்துவதுடன் சத்தான கால்சியம், கனிமம், ஆரோக்கியமான வைட்டமின்கள் கொண்ட பால் பொருட்கள், கேரட், ஆப்பிள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
** ஈறுகள் பழுதாகும் விதமாக தீவிரமாக பல் துலக்குதல், கடுமையான பல்துலக்கியைப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
** சிலர் பல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தேய் தேய் என்று தேய்ப்பார்கள். இது பற்களுக்கு நல்லதல்ல. இதனால் பற்களிலுள்ள இனாமல் போய் விடும். இனாமலைத்தான் பற்களுக்குப் பாதுகாப்பாக இறைவன் படைத்துள்ளான். அது போய் விட்டால் பற்கள் கூசும். உணவுகளைச் சவைக்க முடியாது.
** பல் வலி ஏற்படும்பொழுது விக்ஸ், கோடாலித் தைலம், ஜண்டு பாம் போன்ற வலி நிவாரணக் களிம்புகளை முகத்தில் தேய்த்தல் கூடாது.
இவ்வாறாக நம் உடலைப் பேணினால் நீடூழி வாழலாம். ஆரோக்கியமாக வாழலாம்.